ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். இது பற்றி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரத் துறையும், போக்குவரத்துத் துறையும் தற்போது கடும் நிதி நெருக்கடிக்கிடையே செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கான நிதியைப் பெறுவதற்காக மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் தமிழக மின்வாரியம் முயற்சிகள் மேற்கொண்டது. அந்த நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது தேவையான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அதேபோல், புதிய மின்மாற்றிகள் நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் ஏற்கெனவே விடப்பட்டுள்ளது. அந்த மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின்னர், தமிழகத்தில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிப்பது சாத்தியமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
