சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் ஐம்பத்து ஒன்றாவது ஆண்டு விழா மற்றும் இசை, நாட்டிய விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். கடந்த ஆண்டு கலைஞர் விருது நடிகர் சத்யராஜுக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு திரைப்படத்துறையில் கருணாநிதியின் எழுத்தில் பல படங்களில் நடித்த நடிகர் நாசருக்குக் கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும், இது மிக மிகப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் பத்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து வழங்கி வருவதாகவும், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்குக் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டதையும், டிஎம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதையும், எஸ் பி பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதையும், இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தியதையும் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், கலைஞர்களைப் போற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத் தலைமுறையைப் பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிக முக்கியம் என்றும், கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
