அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதாகக் கூறப்படும் ஜி.கே. மணிக்கு விளக்கம் கேட்டு, கடந்த 18-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உரிய முடிவை அறிவிக்கும்.
சேலத்தில் வருகிற 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டம், பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டம் அல்ல. கட்சியின் விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரம், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கே உள்ளது.
எனவே, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
மேலும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அன்புமணி ராமதாஸே பா.ம.க.வின் சட்டபூர்வ தலைவர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை சட்டப்படி எதிர்கொள்வோம். தி.நகரில் உள்ள அலுவலகமே கட்சியின் தலைமை அலுவலகமாகும்; கட்சியின் சின்னமும் எங்களிடமே உள்ளது என்றார்.
