கிஷ்த்வார் : ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 14) ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மீட்பு, 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 38 பேரின் நிலைமை மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின், முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியதன்படி, ”100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
மேலும், சாசோதி கிராமத்தில், மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் புனித யாத்ரீகர்கள் அதிக அளவில் இருந்தபோது இந்த பேரழிவு நிகழ்ந்தது” என்றார். தற்பொழுது, மீட்பு பணிகளில் NDRF, SDRF, இராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலமான மீட்பு பணிகள் தாமதமாகின்றன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மாநில அரசுக்கு முழு உதவி உறுதியளித்துள்ளனர்.