பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில், குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக (waste-to-energy) கூறி, ஆண்டுக்கு 7,66,000 டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரிக்கும் incinerator திட்டத்தை 1,248 கோடி ரூபாய் செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
மாபெரும் மாசுபாடு
வட சென்னை குப்பை எரிஉலையால் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் விஷக் காற்று வெளியாகும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், காட்மியம், காரீயம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்ட நச்சுக்கள் வெளியாகும்.
வட சென்னையில் மணலி, எண்ணூர் இரசாயன ஆலைகளால் கடும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் புதிய எரிஉலையால் நிலைமை மிக மிக மோசமாகும்!
குடிநீர் & உணவில் நச்சு சாம்பல்
வட சென்னை குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். வட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழல் ஏரி குடிநீரில் நச்சு சாம்பல் கலக்கும். இப்பகுதி உணவகங்களில் தயாராகும் உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். இதனால் வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்.
உயிரைக் கொல்லும்
வட சென்னை குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பலக்கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பறவைகள் சரணாலயத்தை அழிக்கும்
திருவொற்றியூர் சாத்தாங்காடு ஏரிக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இதனை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டல குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே இடத்தில் அமைக்கப்படும் வட சென்னை குப்பை எரிஉலை இந்த பகுதியை நாசமாக்கிவிடும்!
கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகள்
வடசென்னை குப்பை எரிஉலை வரப்போகும் பகுயில், 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் திருவொற்றியூர், மாத்தூர், வியாசர்பாடி, மாதவரம், கொடுங்கையூர், ராயபுரம், காசிமேடு, மணலி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அண்ணாநகர், பெரம்பூர், புழல், செங்குன்றம், வில்லிவாக்கம், பாரிமுனை, கொளத்தூர், எழும்பூர், அயனாவரம், சேப்பாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு பகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் குப்பை எரிஉலை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்படும்.
புழல் ஏரி, ரெட்டேரி, கொரட்டூர் ஏரி ஆகியவற்றில் எரிஉலை விஷ சாம்பல் கலக்கும்.
சமூகநீதிக்கு எதிரான சுற்றுச்சூழல் இனவாதம்
வட சென்னை குப்பை எரி உலையானது திருவொற்றியூரில் அமைக்கப்படுகிறது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைகள், நடுத்தர பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரே அதிகம் வசிக்கின்றனர். இது போயஸ் கார்டன், போட் கிளப் போன்ற உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதி அல்ல. மக்களின் உடல் நலனை கடுமையாக பாதிக்கும் திட்டங்களை இதுபோன்ற பின்தள்ளப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் அமைப்பது சுற்றுச்சூழல் இனவாதம் (Environmental racism) ஆகும். இது சமூகநீதிக்கு எதிரானது.
காலநிலை மாற்றத்தை அதிகமாக்கும்
மின்சார உற்பத்தி தொழில்நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது.
பொருளாதார ரீதியில் பேரிழப்பு
குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, மறுசுழற்சி கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை விட, குப்பை எரிஉலை மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். வடசென்னை குப்பை எரிஉலையால் சென்னை மாநகராட்சி பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும்.
தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லாதது
இந்தியாவில் உருவாகும் குப்பை எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வியடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. சென்னை மாநகரின் குப்பையில் மிக அதிக அளவு காய்கறிக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உள்ளன. இவை ஈரமாகவும் (higher moisture content) எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும் (low calorific value), மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலையை (incinerator) இயக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை.
மேலை நாடுகளில் மூடப்படும் திட்டம்
மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரிஉலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991 ஆம் ஆண்டில் 187 எரிஉலைகள் இருந்தன. ஆனால், இது 2024 ஆம் ஆண்டில் வெறும் 63 எரிஉலைகளாக குறைந்தது. 124 எரிஉலைகள் மூடப்பட்டன. மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் ஒரு குப்பை எரிஉலைக் கூட புதிதாக திறக்கப்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ஐரோப்பிய நாடுகள் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு மானியம் வழங்கக் கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் படுதோல்வியடைந்த திட்டம்
இந்தியாவில் முதன்முறையாக 1987ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் புதுதில்லியில் ஓக்லா குப்பை எரிஉலை தொடங்கப்பட்டது. அந்த திட்டம் படுதோல்வியில் முடிந்து, இழுத்து மூடப்பட்டது. அதன்பின்னர் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் இழுத்து மூடப்பட்டன. எஞ்சியிருக்கும் ஒருசில திட்டங்களும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் கடுமையான உடல்நலக்கேடுகள் காரணமாக மக்களால் எதிர்க்கப்படுகின்றன.
எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்
காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் வடசென்னை குப்பை எரிஉலை திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை (Zero Waste Chennai) மாநகர கோட்பாட்டை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்த வேண்டும்.
“சென்னையை குப்பையில்லா நகராக்கும் மின்சார உற்பத்தித் திட்டம் தாமதம்” என்கிற தலைப்பில் – தினமணி நாளிதழ் வெளியிட்ட கட்டுரைக்கு மறுப்பு வெளியிட வேண்டும்.
இர. அருள், மாநில செயலாளர், பசுமைத் தாயகம் arulgreen1@gmail.com
