தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். உதவியாளர் பணிக்கான தேர்வு ஜனவரி 24ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுககு 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கும் 50 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பில்லை என கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதியானது 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, பட்டயம் அல்லது அதற்கு இணையான படிப்பு மற்றும் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்பட்டு கூட்டுறவு பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கூட்டுறவு பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். எழுத்துத் தேர்வு சென்னையில் ஜனவரி 24ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
மாத சம்பளம்
கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.32,030 முதல் ரூ.96,210 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு tncoopsrb.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
