இந்தியா, சீனாவுக்கு பேரதிர்ச்சி… “இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500% வரி”… புதிய மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்..!! 

Estimated read time 1 min read

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை இலக்காகக் கொண்டு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புடினின் ‘போர் இயந்திரத்திற்கு’ உதவும் நாடுகளைத் தண்டிக்க புதிய சட்ட மசோதாவிற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது: “ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் இரு கட்சி மசோதாவிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுக்கும். அடுத்த வார தொடக்கத்தில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளது.”

அமெரிக்க நாடாளுமன்ற இணையதளத்தில் ‘ரஷ்யாவின் 2025 தடைச் சட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவில் அதிர்ச்சியூட்டும் சில பரிந்துரைகள் உள்ளன. குறிப்பாக: ரஷ்யாவுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கைகள். ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது குறைந்தது 500 சதவீத வரி உயர்வு. இதனால் சீனா, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை.

முன்னதாக, குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய அதிபர் டிரம்ப், “பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள் குறித்து அவர் என்னிடம் அதிருப்தி தெரிவித்தார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால், வாஷிங்டன் வரிகளை மேலும் அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் கூற்றுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் நாட்டின் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தேசிய நலன் சார்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் இந்த மசோதா சட்டமானால், அது இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author