இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், இணைய மோசடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
யுபிஐ (UPI), கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது எளிதாகியுள்ள அதே வேளையில், போலி லிங்குகள் மற்றும் ஓடிபி (OTP) எண்கள் மூலம் பொதுமக்களின் பணத்தை ஹேக்கர்கள் கொள்ளையடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இழந்த பணத்தை மீட்பது பெரும் சவாலாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்க ரிசர்வ் வங்கி இம்முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிஜிட்டல் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையில் 85 சதவீதம் வரை இழப்பீடாக வழங்கப்படும். எனினும், இந்தத் தொகை அதிகபட்சமாக ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்புத் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே பெற முடியும்.
இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு நபருக்கு அவரது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இதற்கான விரிவான விதிமுறைகள் மற்றும் வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.
இந்த வரைவு அறிக்கை வெளியான பிறகு, வங்கிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதன்பிறகே இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார்.
மேலும் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஏமாற்றப்படும் சாமானிய மக்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறு ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
