அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வெடிக்கவிருந்த அணுஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாவது உரையில் பேசிய அவர், “நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் போரில் சுமார் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பதிலடி கொடுத்தபோது, தான் மேற்கொண்ட தூதரக முயற்சிகளே அமைதியை மீட்டெடுத்ததாக ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த வாதத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் என்பது ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே நேரடியாகப் பேசி எடுக்கப்பட்ட இருதரப்பு முடிவு என்றும், இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு ஏதுமில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை இத்தகைய கருத்துக்களைக் கூறி வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கையை 3.5 கோடியாகக் குறிப்பிட்டுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வர்த்தகத் தடைகள் மற்றும் வரிகள் மூலம் நாடுகளை அமைதிக்குக் கொண்டு வந்ததாக அவர் பெருமிதம் கொண்டுள்ளார்.

