“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்”… நம்பர் ஒன் எதிரி… முடிவுக்கு வந்த 30 வருஷ சகாப்தம்… யார் இந்த காமேனி..!!! 

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வந்த நிழல் யுத்தம், தற்போது நேரடிப் போராக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நேற்று ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டின் மிக உயரிய அதிகாரமிக்க தலைவரான அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட இஸ்பஹான், கோம், கராஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய முக்கிய நகரங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆராய்ச்சி கூடங்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் விமான பாதுகாப்பு அரண்கள் மீது ஏவுகணைகள் பாய்ந்தன. இதில் உச்ச தலைவர் கமேனி தங்கியிருந்த இல்லமும் தரைமட்டமாக்கப்பட்டது.

முதலில் கமேனி கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனை ஈரான் மறுத்து வந்த நிலையில், இன்று காலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. கமேனியுடன் அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் தியாக மரணம் அடைந்ததாக ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலிய தற்காப்பு அமைப்புகள் தடுத்த போதிலும், சில இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1989-ம் ஆண்டு முதல் ஈரானின் உயரிய தலைவராகப் பதவி வகித்து வந்தவர் கமேனி. 1979-ல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எதிரியாகக் கருதப்பட்ட இவர், ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும் இவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை.

தாக்குதலுக்குப் பிறகு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானிய மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது. பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். இந்த ஆட்சி மாற்றம் உங்கள் கைகளுக்கு வரும். இது ஒரு வரலாற்று வாய்ப்பு,” எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “நமக்கு பொதுவான எதிரி உங்களை ஒடுக்கும் இந்த அயதுல்லா ஆட்சிதான். உங்கள் நாட்டைச் சீரழித்தவர்களிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறியது முதலே பதற்றம் அதிகரித்து வந்தது. கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை வீசியதும் இந்த நேரடிப் போருக்குக் காரணமாக அமைந்தது. மேலும் தற்போது கமேனியின் மறைவு ஈரானில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author