பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் ஷம்ஷாபாத் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத் வான் எல்லை உடனடியாக மூடப்பட்டதுடன், அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் மற்ற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் விமானப்படை தற்போது போர் விமானங்களை அனுப்பி வான்வழியாகத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையம் அருகே உள்ள எரிபொருள் கிடங்கு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகத் தாலிபான் அரசு குற்றம் சாட்டியிருந்தது.
அந்தத் தாக்குதலில் சுமார் 1,500 டன் எரிபொருள் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாகவே ஆப்கானிஸ்தான் தற்போது இஸ்லாமாபாத் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த மோதல்களால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
