கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த மைக்கைக் காட்டிப் பேசிய அவர், இதில் ‘மேட் இன் சீனா’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஏன் இந்தியாவில் அல்லது கேரளாவில் தயாரித்த பொருட்கள் நம்மிடம் இல்லை என்று கேள்வி எழுப்பிய அவர், உள்நாட்டில் உற்பத்தி இல்லை என்றால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கவலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ஒருசில நிறுவனங்கள் மட்டுமே மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இணைந்து இந்த நாட்டையே அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்குத் தாரை வார்த்து வருவதாக அவர் விமர்சித்தார்.
கேரளாவில் ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
