மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய நகரமான இஸ்பஹான் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அதிகாலை, ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலை மற்றும் வெடிமருந்து கிடங்குகளை இலக்கு வைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 2,000 பவுண்டு எடையுள்ள சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர் மற்றும் ‘பெனட்ரேட்டர்’ ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய ராணுவ நிலைகளைக்கூட ஊடுருவி அழிக்கும் திறன் கொண்டவை.
இந்தத் தாக்குதலின் போது வானில் மிகப்பெரிய தீப்பிழம்புகள் தோன்றியதாகவும், இஸ்பஹான் நகரம் முழுவதும் ஆரஞ்சு நிற வெளிச்சத்தால் சூழப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோவை அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் திறந்துவிடாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் அரசுக்கு அதிபர் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்திருந்தார். “பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் உங்கள் எரிசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், “ஹார்முஸ் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அமெரிக்கா அனுமதிக்காது” எனத் தெரிவித்திருந்தார்.
Trump posts a video of a massive explosion on his Truth Social. No details given pic.twitter.com/4ROua2ZhFZ
— Sidhant Sibal (@sidhant) March 31, 2026
தாக்குதலுக்குள்ளான இஸ்பஹான் நகரம் ஈரானின் மிக முக்கியமான ராணுவ மையமாகும். இங்கு ஈரானின் ‘பத்ர் ராணுவ விமான தளம்’ மற்றும் பல ரகசிய ராணுவ முகாம்கள் உள்ளன. குறிப்பாக, இங்குள்ள நிலத்தடி தளத்தில் சுமார் 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கருதுகின்றன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இதனால் ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கினால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

