கல்வி நிறுவனங்கள் பலவும் ஸ்டாட்-ஆப்-களை ஊக்குவித்து வளர்த்தெடுக்க இன்குபேஷன் மையங்களை இயக்கி வருகின்றன.
ஐஐடியில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் வரை, எல்லா இன்குபேஷன் மையங்களிலும் இளைஞர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலை தங்களுக்கான வாய்ப்பாக கருதி, மிகுந்த ஈடுபாட்டுடன் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான் ப்லிஸ் நேச்சுரல் (Bliss Natural).
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக, இயற்கையில் விளையும் புளிச்சக்கீரை செடியில் இருந்து நாப்கின் பேடுகளைத் தயாரித்து உலகெங்கும் சந்தைப்படுத்துகிறது.

கல்லூரியில் பயிலும் காலத்திலேயே இரு இளைஞர்களின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.
சூழலியல் கேடுகளைத் தாண்டி, பிளாஸ்டிக் தரும் உடல் உபாதைகள் ஏராளம்.
நாப்கினில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பதும் மறுசுழற்சி செய்வதும் இயலாத காரியம்.
அதனை எரித்தாலும் உண்டாகும் புகையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். மேலும் இவை மக்குவதற்கு 200 முதல் 500 வருடங்கள் தேவைப்படும்.
இந்த கணக்கீடுகளை கையில் கொண்டு இயற்கை மூலக்கூறுகளின் மூலம், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டனர் நண்பர்கள்.
ஆந்திராவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் புளிச்ச கீரையை பயன்படுத்தவும் அதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தி தரவும் திட்டமிட்டனர்.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், புளிச்சக்கீரையின் நார்ப்பகுதி, ஈரத்தை உறிஞ்சுகிற தன்மை கொண்டதாகவும் நுண்ணுயிரிகளைக் கொல்கிற திறன் மிக்கதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைப் பற்றிய ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, தேசிய விருதினையும் பெற்றுத் தந்தது. அங்கீகாரம் கிடைத்த உற்சாகத்தில் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நிறைய சவால்களைக் கடந்து 2018 ஆம் ஆண்டு சந்தைப்படுத்துதலை துவக்கினர். மூலப் பொருட்களை வாங்கி அவுட்சோர்சிங முறையில் தயாரித்து விற்பனையைத் தொடங்கினர்.
சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது Bliss Natural.
தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களையும் பெற்றுத் தந்தது.
சிறிய முதலீட்டில் உருக்கொண்ட இந்த நிறுவனம், இன்று எட்டிப் பிடித்திருக்கும் உயரம் அசாத்தியமானது.

ஆண்டுக்கு 60 லட்சம் நாப்கின் பேடுகள் விற்பனை செய்கிற இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள்.
அமெரிக்கா, கனடா, மலேசியா, நியூசிலாந்து, மொரிசியஸ் ஆகிய நாடுகளில் அழுந்த கால் பதித்து வணிகம் செய்கிறது இந்நிறுவனம்.
சுமார் ரூ. 1.5 கோடிக்கு மேலாக மத்திய, மாநில அரசுகள், நிறுவனங்களின் ஊக்கத் தொகைகளை பெற்றுள்ள இந்த நிறுவனத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் டி.என். நிறுவனமும் 10 லட்ச ரூபாய் வழங்கி அங்கீகரித்துள்ளது.
நல்ல மாற்றங்களை நிகழ்த்த நினைக்கும் இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது ப்லிஸ் நேச்சுரல் Bliss Natural.
