போர் நிறுத்தம் வரவேற்பு… ஆனால் லெபனான் மீது தாக்குதல் தொடரும் – நேதன்யாகு!

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு வார போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் இனி அணு ஆயுதம், ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை இஸ்ரேல் முழுமையாக ஆதரிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், “இந்த இரண்டு வார போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.இதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், “அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அனைத்து இடங்களிலும் – லெபனான் உட்பட – உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று அறிவித்திருந்தார்.

இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் நெதன்யாகு இப்போது அதை நேரடியாக மறுத்துள்ளார். லெபனான் மார்ச் 2 முதல் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரில் இழுக்கப்பட்டது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதால் இந்தப் போர் விரிவடைந்தது. ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாகவும், 2024 நவம்பரில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதற்கு எதிர்ப்பாகவும் கூறியது.

லெபனான் அதிகாரிகளின் தகவலின்படி, மார்ச் 2 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் தென் லெபனானில் படையெடுப்பு நடத்தி, “பாதுகாப்பு மண்டலம்” என்ற பெயரில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.

இஸ்ரேல் இன்னும் தென் லெபனானிலிருந்து வெளியேறவில்லை, கைதிகளை விடுவிக்கவில்லை, இடம்பெயர்ந்த மக்களை திரும்ப அனுமதிக்கவில்லை என்ற நிலை தொடர்கிறது. இதனால் ஹிஸ்புல்லா தனக்கு அதிக அரசியல் அழுத்தம் கிடைக்கும் என்று கணக்கிட்டு ஈரானுடன் இணைந்து செயல்படுவதாகக் கருதப்படுகிறது.

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், “ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களை ஈரான் இயக்கி வருகிறது என்பதால், அடுத்த இரண்டு வார பேச்சுவார்த்தை லெபனானுக்கு மிக முக்கியமானது” என்று கூறியுள்ளார். லெபனான் அரசு இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இதற்கிடையில், லெபனான் தேசிய செய்தி நிறுவனம், இஸ்ரேல் தென் லெபனானில் இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. திரே நகருக்கு அருகிலுள்ள ஸ்ரீஃபா மற்றும் சாதிகின் பகுதிகளில் இன்று காலையில் நடைபெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author