இஸ்ரேல் நாடு மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு என்றும், பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய் போன்றது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார். காசா மற்றும் ஈரானைத் தொடர்ந்து தற்போது லெபனானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஐரோப்பிய யூதர்களுக்காக பாலஸ்தீன மண்ணில் இத்தகைய அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு இஸ்ரேல் அரசு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. ஒருபுறம் அமைதிக்காக மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் யூத இன அழிப்பிற்கு அழைப்பு விடுப்பது கண்டிக்கத்தக்கது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலை ‘புற்றுநோய்’ என்று அழைப்பது அந்த நாட்டை அழிப்பதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், தங்களை அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் எப்போதும் தற்காத்துக் கொள்ளும் என்றும் அவர் அந்தப் பதிவில் எச்சரித்துள்ளார்.
