மகளிருக்கு அரசியல் அதிகாரம்: தடங்கலின்றி சாத்தியமாகட்டும்!

Estimated read time 1 min read
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கவிருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாகத் தேர்ந்தெடுக்கப்படப் புதிய வாய்ப்பு உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு 1992-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதில் ஒருமித்த கருத்தை எட்ட மேலும் மூன்று தசாப்தங்கள் தேவைப்பட்டது.
2023 செப்டம்பரில் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. மக்கள்தொகையின் அடிப்படையில் மாநில வாரியாகத் தொகுதி மறுவரையறை செய்வதன் வழியாக இது நடைமுறைப்படுத்தப்படும். 2029-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது 543 ஆக இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்க, அரசமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16) முதல் 18ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட உள்ளன.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது சமூக, அரசியல் மாற்றத்துக்கான முக்கிய நகர்வாகும். கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்குச் சம உரிமை வழங்குவதுடன் இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவு பெறுவதில்லை. இடஒதுக்கீட்டின் அடிநாதமே காலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை அதிகாரப்படுத்துவதுதான். அந்த ஆதார இலக்கை அடைய வரலாற்றில் நெடுங்காலமாக ஒதுக்கப்பட்ட பெண்கள் அரசியல் அதிகார மையத்தில் இடம்பெற வேண்டும். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்கு வரும்போது கல்வி, சுகாதாரம், குழந்தைகள் நலன், மகளிர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மேன்மேலும் வலுப்பெறும்.
அதேநேரம், இடஒதுக்கீட்டின் பயனாகக் கடந்த 33 ஆண்டுகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகப் பெண்கள் வந்தாலும் பெயரளவில் மட்டுமே அவர்கள் பதவி வகிப்பதாகவும், அவர்களின் கணவர் அல்லது குடும்ப ஆண் உறுப்பினர்கள்தான் அதிகாரத்தை அனுபவிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பெண்கள் எம்.பி.-க்களாக, எம்.எல்.ஏ.க்களாக வந்தால், இந்தப் போக்கு மாறும் என்று நம்பலாம்.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் சரியும் அபாயம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கான நாடாளுமன்றத் தொகுதிகள் குறையக்கூடும்: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். இது தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் தொகுதி மறுவரையறைத் திட்டம் தென் மாநிலங்களுக்குப் பெருத்த பாதிப்பை விளைவிக்கும் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி மகளிருக்கான இட்ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோருக்கான இடஒதுக்கீடு குறித்துத்தெளிவு வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
மொத்தத்தில், பெண்களை அதிகாரப்படுத்தும் அதேவேளையில் ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை உருவாகாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் சேர்த்துப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author