நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பில் இன்று அவையில் பின்வரும் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா. தொகுதிகள் மறுவரையறை மசோதா. யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதா போன்றவைகளாகும்.
மேலும் இந்த மசோதாக்களை அறிமுகம் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தெளிவான முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து, ‘டிவிஷன்’ (Division) முறையில் மின்னணு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கு 251 உறுப்பினர்கள் மசோதாக்களை அறிமுகம் செய்ய ஆதரவாக வாக்களித்தனர். 185 உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதாக்கள் வெற்றிகரமாக அவையில் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், மசோதாவின் உள்ளடக்கங்கள் குறித்து முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
