முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தனியார் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து தமிழக அரசிடமிருந்தோ அல்லது முதல்வர் அலுவலகத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தகவல்களின்படி, தற்போது புனித ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில அலுவலகங்களை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, முதல்வர் விஜயை சந்திக்க, நாள்தோறும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் என பலரும் வருகின்றனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். தற்போதுள்ள முதல்வர் அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், முதல்வரை சந்திக்க வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள, 10வது தளத்தை முழுமையாக, முதல்வர் அலுவலகமாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு, கருத்தரங்க கூடம் மற்றும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடம் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
