சென்னை : தமிழ்நாட்டின் கல்வி முறையில் மிகப்பெரிய மற்றும் வரவேற்கத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாடத்திட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் கல்வி முறையை முற்றிலும் எளிமையாக்கி, கற்றலை ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கதைகள் வழியே கணிதம்: “படிக்கும் காலத்தில் கணிதம் வராமல் அதிகமாக அடி வாங்கியுள்ளேன்” என்று தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அமைச்சர், இனி குழந்தைகள் அச்சமின்றி கணிதத்தைக் கற்கும் வகையில் அது கதைகளின் வழியே எளிமையாகக் கற்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
STEAM கல்விமுறை: அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கலை (Arts) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்த நவீன ‘STEAM Education’ முறை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
புத்தகப் பை சுமை குறைப்பு: மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகளவு வண்ணப் படங்களுடன் பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவதால், குழந்தைகளின் பைகளின் சுமை குறையும்; அதன் மூலம் அவர்களின் மனச்சுமையும் பெருமளவில் குறையும்.
மதிப்புகளை வளர்க்கும் கல்வி: நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியாக மட்டுமல்லாமல், பெற்றோரை மதிக்கும் உன்னத பண்புகளை வளர்க்கும் கல்வியாகவும் புதிய பாடத்திட்டம் அமையும்.
“இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது; கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்” என்ற அமைச்சரின் முழக்கத்துடன், மாணவர்களை மையப்படுத்திய அனைவருக்குமான நவீன கல்வி முறை விரைவில் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ளது.
