ஜப்பான் அரசு, பாதுகாப்பு உபகரணங்களின் பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் வழிக்காட்டலை ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திருத்தியுள்ளது.
இதனால் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். முந்தைய கொள்கைகளின்படி போர் அல்லாத 5 வகை பயன்பாட்டு நோக்கங்கள் கொண்ட ஆயுதங்களை ஜப்பான் ஏற்றுமதி செய்யலாம். ஆனால், தற்போது இந்த கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. இது, போருக்கு பிறகு ஜப்பானின் பிரத்யேக தற்காப்பு என்ற கோட்பாட்டை மீறியுள்ளது.
தற்போது உலகளாவிய மற்றும் பிரதேச மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், சர்வதேசப் பிரச்சனைகளில் தலையிட வாய்ப்புகளை உருவாக்குவற்காக, உலகளாவிய ஆயுத ஏற்றுமதி சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்த ஜப்பான் முயற்சி செய்து வருகிறது.
இது பிரதேசப் பாதுகாப்புச் சமநிலையைச் சீர்குலைத்து, படைக்கலப் போட்டியைத் தீவிரப்படுத்தி, உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து, சர்வதேச சமூகம், குறிப்பாக அண்டை நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், ஜப்பானின் புதிய இராணுவவாதத்தை எதிர்ப்பதற்காக உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
