நிலவு.

Estimated read time 0 min read

Web team

thumbnail_rrk2-2.jpg

நிலவு !
கவிஞர் இரா. இரவி !

சித்திரை நிலவே ! சித்திரை நிலவே !
சிந்தையை செதுக்கிட வா ! சீரோடு வா !
எட்டாத தூரத்தில் இருந்தாலும் உன்னை
எட்டிப் பிடிக்கும் எல்லோருடைய மனமும் !

உன்னை விரும்பாதவர் இந்த
உலகில் இல்லை என்பதே உண்மை !

குழந்தை முதல் பெரியவர் வரை
குவலயத்தில் அனைவருக்கும் பிடிக்கும் !

தேய்ந்து வளர்வதாகத் தெரிந்தாலும்
தேய்வு வளர்ச்சி உண்மையில் இல்லை!

கவிஞர்களின் முதல் பாடுபொருள் நீ
காதலி கூட அடுத்த பாடுபொருள் தான் !

உன்னைப் பாடாத கவிஞர் இல்லை
உன்னைப் பாடாதவர் கவிஞரே இல்லை !

அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல
அடுத்து வரும் எதிர்காலமும் நீயே பாடுபொருள் !

கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை கவிஞர்களுக்கு கவிதை தரும் அட்சயப் பாத்திரம் நீ !

உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
உதாரணமாக பூமி அளவுக்கு பிடிக்கும் என்பேன் !

காதலி கூட பிரிவது உண்டு
கண்ணே நீ என்றும் பிரிவது இல்லை !

கனவிலும் வருகிறாய் ! நினைவிலும் வருகிறாய்
காட்சி தருகிறாய் ! களிப்பூட்டுகின்றாய் !

முழு நிலவு நாளில் உன்னை ரசிக்க
முழி இரண்டு போதாது எனக்கு !

பால் நிலவு எனபார்கள் இல்லை இல்லை
பாலை விட வெண்மை நீ !

திருமணமான புதிதில் இணைகள் செல்வதை
தேன்நிலவு செல்லல் என்றார்கள் !

தேன் இனிப்பு நிலவு மகிழ்ச்சி
தேன் நிலவு பொருத்தமாக சூட்டினார்கள் !

உன் மீது முதலில் தயங்காமல் கால் வைத்ததால்
உலக வரலாற்றில் இடம் பிடித்தார் ஆம்ஸ்ட்ராங் !

இருட்டில் நான் நடந்து சென்றால்
என்னோடு நீயும் கூட நடந்து வருவாய் !

வழியில் நின்று உன்னை ரசித்தால்
வனப்புடன் நீயும் நின்று ரசிப்பாய் !

நிலா இங்கே வா ! வா ! என்று பாடிய பாடல்
நீண்டு வளர்ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது !

உன்னைக் காட்டி அன்னை சோறூட்டியது
ஒருபோதும் மறக்கவில்லை எனக்கு !

அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் குழந்தைகளுக்கு
அன்னையால் உன்னைக் காட்ட முடிவதில்லை !

இயற்கையான உன்னை ரசித்து வளர்ந்ததால்
இன்றும் நான் இயற்கை ரசிகனாக உள்ளேன் !

என் தாத்தாவின் காலத்தில் இருந்தது போலவே
என் அப்பாவின் காலத்திலும் இருந்தாய் !

என் காலத்திலும் அப்படியே இருக்கின்றாய்
என் மகன் காலத்திலும் அப்படியே இருப்பாய் !

உன் இளமையின் ரகசியத்தை நீ சொல்
என்னிடம் மட்டுமாவது சொல் !

மாற்றம் ஒன்று தான் மாறாது என்பார்கள்
முழு நிலவில் எந்த மாற்றமும் இல்லை !

காலம் காலமாய் இளமையாக நீ
கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகு !

பசியை மறக்கடிக்கும் அழகு உனக்கு
பாமரனையும் ரசிக்க வைக்கும் அழகு !

கதிரவனிடமிருந்து பெற்ற ஒளியை குளிர்வித்து
குளிர் ஒளியாய் வழங்கும் வித்தை எங்கு கற்றாய் ?

பகலில் கதிரவனைத் திட்டிய மக்கள்
இரவில் உன்னைப் பாராட்டி மகிழ்கின்றனர் !

உன்னைக் கண்டு அல்லி மட்டும் மலரவில்லை
உலக மனிதர்கள் யாவரும் மலர்கின்றனர் !

சந்திராயானை அனுப்பி உன்னுள் தண்ணீர் உள்ளது
செப்பினார்கள் மன ஈரமுள்ளவன் நீ நிரூபணமானது !

சந்திரன் என்று ஆண்பாலுக்கு உன் பெயர்
நிலா என்று பெண்பாலுக்கும் உன் பெயர் !

ஆண் பெண் இருபாலருக்கும் பிடிக்கும்
அதனால்தான் உன் பெயர் இருபாலருக்கும் !

நிலவென முகமென்று காதலியிடம் சொன்னாள்
நிலவென ஒளிர்கின்றது காதலியின் முகம் !

நம் காதலுக்கு நிலவு சாட்சி என்றால்
நங்கை நம்புகிறாள் உன்னை சாட்சியாக !

சங்க இலக்கியத்தில் அன்று வந்த நீ
சந்தோசக் கவிதையில் இன்றும் வருகிறாய் !

வளர்பிறை தேய்பிறை மாயை அறியாதவர்கள்
வாய்க்கு வந்தபடி மூட நம்பிக்கை பரப்புகிறார்கள் !

உனக்கு இணையான உவமை உலகில் இல்லை
உனக்கு உவமை உலகில் நீ மட்டுமே !

குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ !

பசியோடு பார்ப்பவனுக்கு தோசை நீ
பரவசத்தோடு பார்ப்பவனுக்கு பால்நிலா நீ !

விளையாட்டு வீரன் பார்வைக்கு பந்து நீ
விவேகமாக சிந்திப்பவன் பார்வைக்கு சிந்து நீ !

பார்த்துக் கொண்டே இருக்கலாம் சலிப்பே வராது
பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் !

வட்டம் என்ற வடிவத்தின் விளம்பரத் தூதுவர் – நீ
வட்டமிட்டு சுற்றினாலும் சூரியன் வசமாகவில்லை!

உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் கவியரங்கம்
உயரத்தில் இருக்கும் தலைமைக் கவிஞன் நீ !

கதிரவன் பிடிக்குமா? நிலவு பிடிக்குமா? எனக்
கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் வெற்றி உனக்கே !

வெப்பத்தை விரட்டியடிக்கும் சூரன் நீ
அப்பத்தைப் போன்ற உருவமுள்ள இனிமை நீ !

குளத்தில் மிதக்கும் உன்னை சிறுவர்கள்
கல்லால் சிதைத்து மகிழ்வதுண்டு !

ஆதாம் ஏவாள் காலத்திலும் இருந்தாய்
அன்னை தெரசா காலத்திலும் இருந்தாய் !

கேத்ரின் தெரசா காலத்திலும் இருக்கிறாய்
காலம் காலமாய வாழும் விந்தை நீ !

ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும்
ஆண்டாண்டு காலமாய வாழும் உன் வயதென்னவோ ?

மண்ணின் மனிதர்கள் முதுமை தவிர்க்க முடியாதது
விண்ணின் உனக்கோ முதுமை இல்லை இளமை மட்டுமே !

உன்னில் மனிதர் வாழலாமா? என ஆராய்ச்சி
உன்னில் மனிதன் வாழ்ந்தால் மாசாக்கிடுவான் உன்னை !

கண்டால் கவலை காணாமல் போகும் உன்னை
கண்டவர் உள்ளம் கொள்ளை போகும் !

ஒப்பனை இல்லாத இயற்கை அழகு நீ
ஒப்பற்ற உயர்ந்த இடத்து அழகு நீ

நிலவுக்கு உவமை நிலவு மட்டுமே
நிலவுக்கு நிகர் நிலவு மட்டுமே !

Please follow and like us:

You May Also Like

More From Author