தொடர்பு எல்லைக்கு அப்பால்

Estimated read time 0 min read

Web team

IMG-20240410-WA0061.jpg

தொடர்பு எல்லைக்கு அப்பால் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.
பேச : 98411 81345
விலை : ரூ. 70

*****
நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.

நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.

தொடர்பு
எல்லைக்கு அப்பால்
உறவுகள் !

உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.

பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..

நாளைய கூலிக்கு
இன்று சுமக்கிறார்கள்
மாணவர்கள்!

முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.

சமாதானத்திற்காக
நடந்து கொண்டிருக்கிறது
போர்.

உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

மருந்து போடப் போய்
காயப்பட்டு வருகிறேன்
உறவுகள்!

தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.

அமோக
உண்டியல்
பாவத்தின் கூலி?

இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.

எவ்வளவு பெரிய
குப்பைத்தொட்டி
மனம் !

மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.

இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.

வானக் கடல்
மேகவலை, அகப்படவில்லை
விண்மீன் !
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.

திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.

மேய்கிறது
அடங்கவில்லை பசி
கண்!

சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!

மண்ணில் புதைந்தும்
மரிக்கவில்லை
விதை !
வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.

இலட்சங்கள் கொட்டி
வாங்கிய லாட்டரி
கணவன் !

வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.

ஒவ்வொரு முறையும்
தலைப்பிரசவம்
தீக்குச்சி !

இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.

பொதுப்பட்டியல்
விலைப்பட்டியல் ஆனது
கல்வி !

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

கீறல்கள்
புத்தர் முகம்
முள்வேலி முகாம் !

பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.

இதயம் தொடும்
இலவச சிரிப்பு
பூக்கள்
சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

விதியால்
மரணத்தை வெல்லலாம்
சாலை விதி !

நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.

தினம் ஊர்ந்தால்
தேயாமல் எப்படி ?
நிலா !

நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.

நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .

Please follow and like us:

You May Also Like

More From Author