ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைநகர் ரோமில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணம் சென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே பயணத்தை முடித்துக் கொண்டு, இறுதியாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் ரோமில் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து ரோம் நகரில் தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில், இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார். பாரத் மாதாகி ஜே, ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தனது புகைப்படத்தை வரைந்து வந்திருந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராப் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர், அங்கு நடத்தப்பட்ட பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியையும், ஆன்மிக இசை நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி உற்சாகத்துடன் கண்டுகளித்தார்.
அதைத் தொடர்ந்து, தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட வாரணாசி படித்துறை ஓவியத்தை பிரதமர் மோடி ஆர்வத்துடன் பார்வையிட்டார். பிரதமர் மோடியின் இத்தாலி பயணத்தை முன்னிட்டு, அவரை வரவேற்கும் விதமாக ரோமுக்கு நல்வரவு என் நண்பரே என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
