தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை..!

Estimated read time 1 min read

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி, கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி மாலை தனது வீட்டில் இருந்து அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார்.

அடுத்த நாள் மார்ச் 11ஆம் தேதி காணாமல் போன மாணவி காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அலங்கோலமான நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த போலீசார் வேடநத்தம் கிராம காட்டுப்பகுதிக்கு வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொடூர கொலை சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வேடநத்தம் கிராம மக்கள், தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும், தூத்துக்குடி – ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையிலும் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீனா மார்ச் 12ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் காற்றாலை கோபுர சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீசார் மார்ச் 19ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர்.

குளத்தூர் காவல் நிலையத்தில் தர்ம முனீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து, மார்ச் 20ஆம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு போலீசார் அவரை அழைத்து வந்து, சம்பவத்தை நடித்து காண்பிக்க வைத்து, அதை வீடியோவாக பதிவு செய்தனர்.

குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி மாணவியின் குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து அவரது சடலத்தை பெற்று 10 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்தனர்.

இச்சம்பவம் குறித்த வழக்கானது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி அனைத்து விசாரணை நடைமுறைகளும் முறைப்படி நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் மே 25ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு என தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author