3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதமும் சட்டப்பேரவை விதிகளின்படி உள்ளதால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். எஸ் பி வேலுமணி சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 25 பேர் அரசு ஆதரவாக வாக்களித்தனர் . இதன் மூலம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தனித்தனியாக கொறடா , சட்டமன்ற குழு தலைவர் நியமிக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் ஆய்வில் உள்ள நிலையில் சிவி சண்முகம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரி பாஸ்கர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் ஆகிய ஐந்து பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்துள்ளனர் .
இந்நிலையில் தான் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர் .
இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகத குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஆகிய மூன்று உறுப்பினர்களும் இன்று முதல் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக முறைப்படி கடிதம் கொடுத்துள்ளனர். சட்டப்பேரவை விதிப்படி சரியாக உள்ளதால் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தட்டச்சு இல்லாமல் கைப்படி எழுத வேண்டும் ஆட்கள் வைத்துக் கொடுக்காமல் அவர்கள் வந்து நேரடியாக கொடுக்க வேண்டும் இதன்படி கொடுக்காமல் இருந்தால் விசாரணை நடத்தலாம் அவர்கள் நேரடியாக கொடுத்ததால் முடிவு உடனடியாக எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிலையில் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, அனைத்து மனுக்களும் நிலுவையில் உள்ளது ஆய்வு செய்து அறிவிப்பேன் . கொறடா யார் என்று அறிவிப்பதற்கு காலக்கெடு ஏதுமில்லை ஆய்வு செய்து முறைப்படி அறிவிப்பேன்” என்றார்.
