சீன-இந்திய எல்லை பிரச்சினை பற்றிய சிறப்புப் பிரதிநிதிகளின் 25வது பேச்சுவார்த்தை ஆகஸ்டு 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவல் ஆகியோர், சீன-இந்திய எல்லை பிரச்சினை, இரு நாட்டுறவு முதலியவை குறித்து, பன்முகங்களிலும், ஆழமாகவும் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும், உலகளாவிய தெற்கு நாடுகளின் பொது விருப்பங்களுக்கும் பொருந்தியது என்றார். மேலும், இந்தியாவுடன் இணைந்து, உத்திநோக்கு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் இரு நாட்டுறவைக் கையாண்டு, ஒன்றுக்கொன்று நலன் தரும் கூட்டாளிகளாக விளங்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தோவல் கூறுகையில், சீனாவுடன் உத்திநோக்கு தொடர்பை மேலும் நெருக்கமாக்கி, எல்லை பகுதியை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தி, எல்லை பிரச்சினைக்கான தீர்வு முறையை ஆராய்ச்சி செய்து, இந்திய-சீன உறவின் மேம்பாட்டை விரைவுப்படுத்த இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.
தவிரவும், எல்லை பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையை முன்னேற்றுவது, எல்லை கடந்த ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பது முதலியவை குறித்து, இரு தரப்பினரும் ஆழமாக தொடர்பு மேற்கொண்டதோடு, சீன-இந்திய எல்லை பிரச்சினை பற்றிய சிறப்புப் பிரதிநிதிகளின் 26வது பேச்சுவார்த்தையை 2027ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஒப்பு கொண்டனர்.
