கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

திருமாலின் 8-வது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்…

அதன்படி, கோபாலபுரம் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் குழந்தை கிருஷ்ணர் தொட்டிலில் இருப்பது போன்றும் மலர்களாலும் கிருஷ்ணர் அழகாக அலங்கரித்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்….

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து, கிருஷ்ண நாமத்தை உச்சரித்து சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கோவையில் உள்ள இஸ்கான் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இஸ்கான் அமைப்பின் மண்டல செயலாளர் பக்தி வினோத ஸ்வாமி மகாராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், அதிகாலை 4.30 மணி முதல் சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பாலகோபாலருக்கு அபிஷேகம், கோ பூஜை, ஜெகநாதருக்கு தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் ஆயிரத்து 8 கலசங்களில் நிரப்பப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலும் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் ராதாகிருஷ்ணர் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இவ்விழாவில், சிறப்பு பாகவத வகுப்புகள், குரு பூஜை, பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக நடைபெறும் கீர்த்தன மேளாவில் பங்கேற்ற பக்தர்கள், கிருஷ்ண நாமத்தை உச்சரித்து பக்தி பரவசத்தில் திளைத்தனர்.

You May Also Like

More From Author