பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்டும் நிவாரணத் தொகை ரூ5 லட்சத்தில் இருந்து ரூ8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டுமானப் பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை 8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பு செயல்படுத்தும் விதமாக விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள், வாரிசுதாரர்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது.