உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 25ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவரது மனைவி பெங் லீயுவானும், வெள்ளை மாளிகையில், அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் உரையாடலை நடத்தினர்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாஷிங்டன்னை வந்தடைந்து, அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இந்தப் பயணத்தின் போது நம்மிடையே சீன-அமெரிக்க உறவுகளின் உட்பொருளை மேலும் செழுமையாக்குவதோடு, மரியாதை, நியாயம், பரஸ்பர சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு சார்ந்த நிலையான உறவைக் கட்டியமைப்பதில் இணைந்து செயல்படவும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் ஒன்றுக்கொன்று பயன் தரும் சாதனைகளைப் பெற்றுள்ளோம். இது, இரு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் வரவேற்பை பெறும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், சீனா-அமெரிக்க உறவுகளின் எதிர்காலம் பிரகாசமானது. இதுவே வரலாற்றின் பொதுவான போக்கு என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். அதே நேரத்தில், இந்தப் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பாதை பெரும்பாலும் வளைந்து நெளிந்து செல்லும் போது, பல்வேறு சிரமங்களும் சவால்களும் எப்போதும் இருக்கும். இது வளர்ச்சியின் விதிகளுக்கு இசைவானதாகும் என்றும் தெரிவித்தார். சீன-அமெரிக்க உறவுகளின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைக் கூட்டாக படைப்பதற்கும் வகையில், வரலாற்றுக்குப் பொறுப்பேற்கும் துணிச்சலுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
டிரம்ப் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அமெரிக்க அரசு முறைப் பயணம் ஆக்கப்பூர்வமானதாகவும் மிகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்தது என்றார். இரு தரப்பினரும் அமெரிக்க-சீன உறவுகள் குறித்தும், முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பல நேர்மறையான சாதனைகள் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.அமெரிக்க-சீன உறவுகளின் வளர்ச்சியைக் கூட்டாக வழி நடத்துவதற்காக, அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
தேநீர் உரையாடல் முடிந்த பிறகு, டொனல்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானி டிரம்ப் ஆகியோருடன் இணைந்து, ஷி ச்சின்பிங் மற்றும் பெங் லீயுவான், அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்திற்குச் சென்றனர். இந்த ஆவணக் காப்பகம் மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் பற்றிய அறிமுகத்தை அவர்கள் கேட்டறிந்தனர்.
