போரைத் தொடங்குங்க” டிரம்ப்புக்கு தினமும் போன் போட்டு நச்சரித்தாரா நெதன்யாகு….?

Estimated read time 1 min read

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே வார இறுதியில் தொலைபேசியில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரை மீண்டும் தொடங்குமாறு நெதன்யாகு அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் டிரம்ப் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்பியதால் இருவருக்குள்ளும் கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தச் செய்திகளை முற்றிலும் பொய் என நிராகரித்துள்ள நெதன்யாகு அலுவலகம், இரு தலைவர்களுக்கும் இடையே எந்தவிதக் கடினமான உரையாடலும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வாஷிங்டனுக்கும் ஜெருசலேமுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு, ஈரான் தனது அணு ஆயுதத் திறனை மீண்டும் உருவாக்கி வருவதாகவும், அயதுல்லா ஆட்சியைக் கவிழ்ப்பதே இந்த அச்சுறுத்தலை நிரந்தரமாக ஒழிக்க ஒரே வழி என்றும் வலியுறுத்தினார். மேலும், இஸ்ரேல் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதைக்குப் புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும், கத்தார் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகும் பேசிய அவர், ராஜதந்திர முயற்சிகள் தொடர்வதால் தற்போதைக்குப் போர் தேவையில்லை எனக் கூறினார். அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ மற்றும் ‘ஆபரேஷன் அயர்ன் கேட்’ ஆகிய நடவடிக்கைகள் மூலம் ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்கள் முழு வீச்சில் தொடரும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலைத் தொடங்குமாறு டிரம்ப்புக்கு நெதன்யாகு தினமும் தொலைபேசியில் அழைத்து வலியுறுத்தி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், பிராந்தியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே, ஈரானின் சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், அபத்தமாகவும் இருப்பதால் பேச்சுவார்த்தையில் உடனடி முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். முன்னதாக கடந்த ஜூன் மாதமும் தொலைபேசி உரையாடலின் போது நெதன்யாகுவை டிரம்ப் கடுமையாக விமர்சித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author