டெல்லி : நமது நாட்டின் தலைநகரான டெல்லியில், நாட்டின் இதயப்பகுதியாகத் திகழும் மத்திய அரசு அலுவலகக் கட்டிடங்கள் விரைவில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் உருமாறுகின்றன. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு, பல தசாப்தங்களாக நாட்டின் மிக முக்கிய அதிகார மையங்களாகச் செயல்பட்டு வந்த ‘நார்த் பிளாக்’ (North Block) மற்றும் ‘சவுத் பிளாக்’ (South Block) கட்டிடங்கள், தற்போது உலகின் மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்டமான அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளன.
‘யுகே யுகீன் பாரத்’ (Yuge Yugeen Bharat Museum) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டத் திட்டம், இந்திய வரலாற்றின் பெருமையை உலக அரங்கில் உச்சிக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் பிரம்மாண்டத்தை எண்ணி உலக நாதிகளே வியந்து பார்க்கும் அளவிற்கு இதன் கட்டமைப்பும் பரப்பளவும் அமைகிறது. சுமார் ரூ.3,230 கோடி மதிப்பீட்டில், பிரமாண்டமான 1.78 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது.
உலகின் மிகச்சிறந்த வரலாற்று மையங்களாகக் கருதப்படும் பாரிஸில் உள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களை விடவும் அதிக பரப்பளவு கொண்டதாக இது உருவாக்கப்படுவது இதன் மகுடத்தில் மற்றுமொரு மணிமகுடமாகும். இதன் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், நாகரிகம் மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு ஒரே கூரையின் கீழ் கண்முன்னே விரிய இருக்கிறது.
இந்தியாவின் பழம்பெருமை, கலைநயம், தொல்லியல் பொக்கிஷங்கள் மற்றும் நவீன இந்தியாவின் சாதனைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரலாறு மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு பொக்கிஷ பூமியாக மாறுவதில் எந்த ஐயமும் இல்லை. அதிகாரக் கூடங்களாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கட்டிடங்கள், இனி இந்தியாவின் கலாச்சாரப் பெருமையைச் சொல்லும் ஆலயமாக மாற இருப்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
