சமூக வலைதளங்களில் எல்நினோவை முன்வைத்து பல்வேறு பீதியூட்டும் செய்திகள் காரசாரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தற்போது துவங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிவரை எல்நினோ தாக்கம் மிகவும் கடுமையாகவும், வீரியத்துடனும் இருக்கும் என்று பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்த தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய ஆய்வறிக்கைகளை முன்வைத்து பலரும் பேசி வருகிறார்கள்.
கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பலர் உயிரிழக்க நேரிடலாம் என்றும் பார்க்கிறவர்கள் அல்லது படிக்கிறவர்களிடம் பீதியைக் கிளப்புவது மாதிரியான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
மத்திய அரசின் வானிலை ஆய்வு நிபுணர்களும் இதையே சற்று மென்மையாகச் சொல்கிறார்கள்.
அதேசமயம், சூப்பர் எல்நினோ என்று அழைக்கப்படுகிற தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றி, நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
200 ஆண்டுகளுக்கு முன்னால், 1876-ம் ஆண்டு இந்தியாவில், இதேமாதிரியான எல்நினோ தாக்கம் உருவானபோது, கடுமையான வெப்பம் பரவி தாங்கமுடியாத அளவுக்கு வேதனைகளை அப்போது வாழ்ந்த மக்கள் அனுபவித்தார்கள்.
தாது வருடத்திய பஞ்சம் என்று அழைக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.
பலர் போதுமான உணவின்றி எலும்பும் தோலுமாகக் காட்சியளித்ததாக அப்போதைய ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நேரத்தில் தமிழகத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்படுவதை பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும் சில முதியவர்கள் சொல்லும் முன்னோர்களின் அனுபவங்கள் வாயிலாகவும் உணர்ந்திருக்கிறோம்.
இந்த சமயத்தில் நாம் என்னதான் செய்வது?
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு வலிமையான இந்த எல்நினோ தாக்கம் மத்திய பசிபிக் பெருங்கடலில் உருவாகி அது உலகளாவிய அளவில் பல நாடுகளுக்குப் பரவி அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப இப்போதே வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பமயமாக மாறி இருக்கிறது.
இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு பலர் புழுக்கத்தை அனுபவிக்கிறார்கள். நீர்ச்சத்துக் குறைந்து சிலர் மயக்கமாகிறார்கள்.
குறிப்பாக சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தோலில் மாற்றங்கள் ஏற்படுவதோடு வயிற்றில் செரிமானக் குறைபாடு போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே, பெரும் பீதியை ஏற்படுத்திய கொரோனா தொற்று இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவியபோது, அதிகளவில் உயிரிழப்புகள் நடந்தாலும், கொரோனாவை எதிர்கொண்டு அதற்கான மாற்று வழிமுறைகளை மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டியிருக்கின்றன.
தற்போதும், அதே மாதிரியான ஆயத்த நிலையையும் எச்சரிக்கை நிலையையும் எல்லோரும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
இதை எப்படி எதிர்கொள்ளலாம்?
1. வரும் நான்கு மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால், எல் நினோ தாக்கம் அதிகரிக்கும்போது, பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் நடக்கலாம்.
அவை சரிவர கிடைக்காத பற்றாக்குறையும் நிலவலாம்.
இம்மாதிரி கடுமையான தட்டுப்பாடு நிலவும்போது, மாநில அரசு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டமெல்லாம், எந்த அளவுக்கு சரியாக அமல்படுத்தப்படும் என்பதெல்லாம் தெரியவில்லை.
2. ஊடகங்களில் எல்நினோ குறித்த எத்தகைய ஆய்வறிக்கைகள் வெளிவந்தாலும் கூட, அவற்றை வைத்து பீதியடைய வேண்டியதில்லை.
நமக்கான எச்சரிக்கையாக மட்டுமே அவற்றை எடுத்துக் கொண்டால் போதுமானது.
எல் நினோவின் தாக்கம் எப்படி இருக்கிறதோ, இல்லையோ எல்நினோ குறித்த மீடியா கொட்டும் செய்திகளின் தாக்கம் அதிகரித்திருப்பதாலேயே இதைச் சொல்ல நேர்கிறது.
3. குறிப்பிட்ட நான்கு மாதங்களில் வெயிலில் செல்வதை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்வது நல்லது.
சிறு குழந்தைகளை விளையாட அனுமதிப்பது நல்லதுதான் என்றாலும், எல்நினோ சமயத்தில் வெயிலின் தாக்கம் கூடிய நிலையில், அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெவ்வேறு அலுவலகங்களில் வேலைகளைச் செய்கிறவர்கள் கொரோனா காலத்தில் மேற்கொண்ட மாதிரி வீட்டிலிருந்தே பணிகளைச் செய்வது என்கிற நடைமுறையை தற்காலிகமாகக் கொண்டு வரலாம்.
4. எப்போதும், எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களைக் கூடவே வைத்துக் கொள்வதும் நீர்ச்சத்துக் குறைந்து ஆபத்துக்கள் உருவாவதைத் தடுக்கும்.
5. இம்மாதிரியான வெப்ப நிலை மாற்றத்தின்போது, தவிர்க்க இயலாமல் வெளியில் நடந்து செல்கிறவர்கள் குடை போன்றவற்றை எடுத்துச் செல்லலாம்.
கூடுமான வரை குளிர்பானங்களை அருந்துவதைவிட இயற்கையான கொடையான இளநீர், மோர், பதநீர் போன்றவற்றை அருந்தி உடலின் வெப்பத்தை சீராக்கலாம்.
6. எதற்கெடுத்தாலும் அரசைக் குறை கூறுவதை விட்டுவிட்டு இம்மாதிரியான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எந்த அரசியல் கட்சியும் தனது உள்ளுர் அரசியலை முன்வைத்து இம்மாதிரியான அசாதாரணமான சந்தர்ப்பங்களில் அரசியல் செய்ய வேண்டாம்.
உலகளாவிய இயற்கை பேரிடரை எப்படி எதிர்கொள்வது என்பதில், சுயநலம் சாராத, மக்கள் நலன் சார்ந்த பார்வையோடு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் செயல்பட வேண்டும் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
– யூகி.
The post எல்நினோ: பயம் வேண்டாம் எச்சரிக்கை போதும்! appeared first on Thaaii Magazine.
