கந்தசஷ்டி விரத நாட்களில், ஆணவம், வன்மம், மாயை எனும் 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழி அமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம்கிட்டும் என்பது ஐதீகம்!.
கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாவது நாள் இன்று வியாழக்கிழமை வருகிறது. கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாவது நாளில் முருகப் பெருமானுக்கு ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் மூன்று தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். ஷட்கோண கோலத்தின் மத்தியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச் சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் “சரவண பவ” என எழுத வேண்டும். முதல் நாளில் “ச” என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் “ர” என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், மூன்றாவது நாளில் “வ” என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலை, மாலை இரு வேளையும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
ஷட்கோண கோலத்தை ஒவ்வொரு முறையும் புதியதாக வரைந்தே அதன் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலையில் ஷட்கோண கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டாலும், மாலையில் மீண்டும் அதை துடைத்து சுத்தம் செய்து விட்டு புதியதாக கோலமிட்டு, அதன் மீது விளக்கேற்ற வேண்டும். காலையில் பயன்படுத்திய பூக்கள், நைவேத்தியங்களை மீண்டும் மாலையில் பயன்படுத்தக் கூடாது. புதியதாக நைவேத்தியம் செய்தே வழிபட வேண்டும். ஏதாவது ஒரு வேளை நைவேத்தியம் செய்து படைத்து விட்டு, மற்றொரு வேளை பழம் அல்லது பால் மட்டும் வைத்து வழிபடலாம்.
கந்தசஷ்டியில் 3வது நாளில் முருகப் பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள் சிறிய அளவில் நைவேத்திய பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.
கந்தசஷ்டியின் மூன்றாவது நாளில் அரிசியை உடைத்தோ அல்லது அரிசி மாவையோ எடுத்துச் சென்று ஏதாவது எறும்புக் குழியில் சென்று போட வேண்டும். சாதாரணமாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு. ஆனால் அனைவராலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியாது. அதனால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலனை பெறுவதற்காக ஆயிரம் எறும்புகளுக்கு உணவளிக்கலாம். அதோடு அரிசி மாவை தானமாக வழங்கினால் செல்வம் பெருகும். அரிசி, மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதவை தானமாக வழங்கும் போது நமக்கு செல்வ பெருகிக் கொண்டே இருக்கும்.
முருகப் பெருமானின் அருள் பெற இது சிறந்த காலம் என்பது ஐதீகம்.
தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசத்தினை படித்தோ, கேட்டோ முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.
