பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு புதன்கிழமை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்புவாதம் ஆகியவற்றுக்கான கூட்டுறவு என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாட்டில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசா, சீன அதிபர் ஷிச்சின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
அதேவேளையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் காணொலி வழியாக பங்கேற்று உரை வழங்கினார்.
வணிகம், நிதித் துறைகளைச் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவாக்கவும், மக்களிடையே தொடர்பு மற்றும் நாகரிகப் பரிமாற்றங்களை அதிகரிக்கவும் நீதியைக் கடைப்பிடித்து உலக நிர்வாகத்தை மேம்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் பாடுபட வேண்டும் என்று தலைவர்களும் உச்சிமாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க ஆகிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40சதவீதமாகவும், உலகப் பொருளாதாரப் பங்கில் சுமார் 25 சதவீதமாகவும் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
