நடுவானில் திகில்..‌ ஏர்போர்ட்டில் 5000 அடி உயரத்தில் வட்டமடித்த விமானம்…  

Estimated read time 1 min read

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பிரிவு வீரர்கள் பயணித்த விமானம், மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தரையிறங்க முடியாமல் நடுவானில் தத்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு இந்திய அணி இரு குழுக்களாகப் பிரிந்தது. இதில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணி மவுண்ட் மவுங்கனுய் நகருக்குச் சென்ற நிலையில், சுப்மன் கில், கே.எல். ராகுல், அன்ஷுல் கம்போஜ் உள்ளிட்ட சுமார் பத்து வீரர்கள் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அடங்கிய டெஸ்ட் குழுவினர் ஹாமில்டனில் இருந்து வெலிங்டன் நகருக்கு ஏர் நியூசிலாந்து விமானத்தில் புறப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி காலை 11:43 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், வெலிங்டன் விமான நிலையத்தை நெருங்கியபோது எதிர்பாராத விதமாகக் கடுமையான குறுக்குக் காற்று மற்றும் வானிலை சீற்றத்தை எதிர்கொண்டது. மலைகளால் சூழப்பட்ட வெலிங்டன் விமான நிலையம் உலகின் மிகச் சவாலான விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மதியம் 12:45 மணியளவில் ஓடுபாதைக்குச் சில நூறு அடிகள் உயரத்தில் விமானம் வந்தபோது, காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் விமானிகள் திணறினர். இதனால் பெரும் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானிகள், விமானத்தை மீண்டும் உயரே எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மீண்டும் 5,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வானில் வட்டமிடத் தொடங்கியது. காற்றின் வேகம் சற்றுத் தணிந்த பிறகு, விமானிகள் இரண்டாவது முறையாக விமானத்தைத் தரையிறக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட நேரத்தை விட 26 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1:06 மணியளவில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

நடுவானில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்வுகளால் இந்திய வீரர்கள் மற்றும் பணியாளர்களின் இதயத் துடிப்பு எகிறிய போதிலும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது நிம்மதி அளித்துள்ளது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பிறகே வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 19-ஆம் தேதி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author