சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கும் தனது மகனைப் படிக்க வைக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார். தொலைக்காட்சி பார்ப்பதைத் தடுக்காமல், அதையே படிப்புடன் இணைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய முறையை உருவாக்கியுள்ளார். இதன்படி, மகன் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பாடக் கேள்விக்குப் பதிலளித்தால்தான் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியும்.
தொழிலால் வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் அந்தத் தந்தையின் மகன், இளநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். படிப்பதைவிட அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே மகன் செலவிடுவதாகத் தந்தை கவலைப்பட்டுள்ளார். முதலில் தொலைக்காட்சியில் ஏற்கெனவே இருந்த கேள்வி – பதில் வசதியைப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். ஆனால், மகன் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டார். அடுத்ததாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரத்தைத் துண்டிக்கும் கருவியைப் பொருத்தியுள்ளார். அதையும் மகன் செயலிழக்கச் செய்ததால் தந்தையின் முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு செயலியின் உதவியை நாடிய தந்தை, தொலைக்காட்சி பார்க்கும்போது மகனிடம் பாடம் தொடர்பான கேள்விகளைக் கேட்கும் மென்பொருளை உருவாக்கச் செய்துள்ளார். அதன்படி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு திரையில் ஒரு கேள்வி தோன்றும். சீன மொழி, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து மகனின் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு ஏற்ற கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில் அளித்தால் மீண்டும் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். சரியான பதில் கிடைக்கும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடராது.
இந்தப் புதிய முறையால் மகன் கோபப்படுவான் என்று நினைத்த தந்தைக்கு ஆச்சரியமே காத்திருந்தது. கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் மகனும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளாராம். தற்போது கேள்விகளின் கடினத்தன்மையை அதிகரித்து, இந்த முறையை மேலும் மேம்படுத்தத் தந்தை திட்டமிட்டுள்ளார்.
மகன் இந்த அமைப்பை ஏமாற்றப் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதும், தந்தை அதிலுள்ள குறைகளைச் சரிசெய்வதும் இருவருக்கும் இடையிலான விளையாட்டாக மாறியுள்ளது. தொலைக்காட்சியை முற்றிலும் தடை செய்யாமல், பொழுதுபோக்குடன் படிப்பையும் இணைத்த தந்தையின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
