கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Estimated read time 1 min read

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 10-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலாவதாக யானை முகம் கொண்ட கஜமுகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

தொடர்ந்து உருவத்தை மாற்றி சிங்க முகத்துடன் போர் செய்ய வந்த சிங்கமுகாசுரனை ஜெயந்தி நாதர் வதம் செய்து அருள்பாலித்தார்.

நிறைவாக தனது சுயரூபத்தில் போரிட வந்த சூரபத்மனை, அன்னையிடம் பெற்ற சக்தி வேலால் வதம் செய்தார். அப்போது வெற்றிவேல், வீரவேல் என பக்தர்கள் விண்ணதிர முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன்னுள் ஆட்கொண்டார். இந்த விழாவின் போது கோபுரத்தின் உச்சியில் மயில் ஏறி நின்ற நிலையில் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author