சாலை இளந்திரையனின் படைப்புலகம்.

Estimated read time 1 min read

Web team

சாலை இளந்திரையனின் படைப்புலகம்!

நூல் ஆசிரியர் : முனைவர் லி. ஜன்னத் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

பேராசிரியர் சாலை இளந்திரையன் அறக்கட்டளை,
25(11) திருவீதியான் தெரு, கோபாலபுரம், சென்னை. பேச : 95519 22871, பக்கம் : 304, விலை : ரூ.200.

******
நூலாசிரியர் முனைவர் லி.ஜன்னத் அவர்களுக்கு பாராட்டுக்கள். இசுலாமிய மதத்தைச் சார்த்தவராக இருந்த போது பகுத்தறிவாளர் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றமைக்கும் இந்த தலைப்பை வழங்கி நெறியாளராக இருந்து, இந்த நூலிற்கு அணிந்துரையும் வழங்கி இருப்பவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். அவர்களுக்கு அடுத்த பாராட்டு.

நான் சிறுவனாக இருந்தபோது புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுடன் அக்கால இலக்கிய இணையர் சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் அவர்களின் கூட்ட்த்திற்குச் சென்று அவர்களது உரையினைக் கேட்ட அனுபவம் இந்த நூல் படித்தபோது மலரும் நினைவுகளாக மலர்ந்தன.

இந்த நூலில் 6 இயல்கள் உள்ளன. அவையாவன : 1. சாலையாரின் வாழ்வும் பணிகளும், 2. கவிஞர், 3. திறனாய்வாளர், 4. கட்டுரையாளர்,

5. பிற பரிமாணங்கள், 6. ஆளுமைப் பண்புகள். இந்நூல் படித்து முடித்த போது சாலை இளந்திரையன் அவர்கள் எவ்வளவு பெரிய ஆளுமையாளர் திறமையாளர், சகலகலா வல்லவர் என்பதை உணர முடிந்த்து. பாராட்டுக்கள்.

இந்த நூலும் சாலையார் தொடங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட்து என்பது தனிச்சிறப்பு. மிக நேர்த்தியாக பிழைகள் எதுவுமின்றி நல்ல தமிழில் அச்சிட்டு உள்ளனர். அக்காலத்தில் அச்சகம் ஆரம்பித்த போது தொழிலாளர்களிடையே மனிதநேயத்துடன் நடந்துகொண்ட விதம் குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு என்று அறிவித்து செயல்படுத்திய விதம் என வாழ்க்கை வரலாறு முழுவதும் நூலில் உள்ளது.

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சாலையாருக்கு இரங்கல்பா பாடிய கவிதை நனி நன்று.

இளந்திரைய மதகன்று
இறப்பைக் கிழித்தெறிந்து
இதோ
இப்போது பிளிறிகிறது!

சாலையார் பன்முக ஆற்றலாளர் மட்டுமல்ல, மனிதநேயர், அன்பாளர், பண்பாளர், வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வல்லவர், நல்லவர், பேச்சு, செயல் இரண்டும் வேறுபாடு இல்லாத மாமனிதராக வாழ்ந்து சிறந்த வரலாறு படிக்கப்படிக்க பிரமிப்பு.

அவருடைய பல கவிதைகளை மேற்கோள் காட்டி அவரது கவியாற்றலை திறம்பட படம்பிடித்துக் காட்டி உள்ளார். அவற்றில் சில கவிதைகள் பதச்சோறாக :

அன்னையே!
அன்பின் ஊற்றே!
அழகிய மங்கைக்கோலம்
தன்னையும் தியாகம் செய்து
தளர்ச்சியை உடலில் ஏற்றே
என்னை நீ பெற்றாய் ; பெற்றுன்
இளந்தமிழ்த் தாலாட்டென்னும்
கன்னலின் சாறு பெயது
கவிதையாய் என்னை வளர்த்தாய் !

அம்மாவின் சிறப்பை, தியாகத்தை, உழைப்பை எடுத்தியம்பி,. என்னை கவிதையாக வளர்த்தாய் என்று முடித்தது முத்தாய்ப்பு.

சாதியைக் காக்க ஆள்களைக் கொன்றோம்
ஊர்களைத் தீயிட்டோம், மதச்
சடங்கினையே நம் வழக்குகளாக்கி
நடையினில் பிழைபட்டோம்!

சாலையார் அன்று பாடிய பாடல் இன்றும் பொருந்துவதாகவே உள்ளது. கணினி யுகத்திலும் சாதிமதச் சண்டைகள் நடப்பது மனிதகுலத்திற்கு தலைகுனிவு என்பதை மனிதவிலங்குகள் உணர்ந்திட வேண்டும்.

சாலையார் எழுதிய நூல்கள் நூலகங்களில் கிடைக்காமல் நூல் ஆசிரியர் சென்னை வர சென்று தங்கி இருந்து, நூல்களைப் பெற்று ஆய்வு செய்து ஆய்வேட்டை முடித்த்தை இந்த நூல் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுள்ளார். மெனக்கெட்டு சிரமப்பட்டு ஆய்வு செய்து ஆய்வை முடித்து முனைவர் பட்டம் பெற்று ஆய்வேட்டையே சுவைபட தொகுத்து நூலாக்கி இருப்பது சிறப்பு.

சாலையார் கவிஞர் மட்டுமல்ல திறனாய்வாளராக சொற்பொழி-வாளராக திகழ்ந்து உள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் படைப்புகலை ஆய்வு செய்து சாலையார் கட்டுரைகளும் நூல்களும் வடித்துள்ளார்.

சங்க இலக்கியத்திற்கு பிறகு சிறந்த கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே என்று சாலையார் பாராட்டி உள்ளார். கவிஞர் மட்டுமல்ல சாலையார் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். சிறுகதைகளை ஆய்வு செய்து அதன் சிறப்புஅம்சங்களை நூலாசிரியர் திறம்பட எழுதி உள்ளார், இயம்பி உள்ளார்.

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை /
தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை தமிழ்நாடு
தமிழ் மக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும்
இருந்த தில்லை !

தமிழ்நாடு தமிழர் எழுச்சி பெற கவிதை
களால் உத்வேகம் தந்தவர் பேராசிரியர்
சாலையார் அவரது படைப்புகளைத்
தேடித்தேடி கண்டுபிடித்து ஆய்வுசெய்து
பழச்சாறாக இந்நூலை வழங்கி உள்ளார் முனைவர் லி. ஜின்னத்.

இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய ஆளுமையாளர் சாலையார். அவருடைய கவிதைகளில் உள்ள சிறப்புகளை விரிவாக விளக்கமாக எடுத்து இயம்பி உள்ளார். கவிதைகளில் உள்ள உவமை நயம் பழமொழியைப் பயன்படுத்துதல் பிறநாட்டு அறிஞர்களின் தாய்மொழிப்பற்றை கவிதையில் வடித்து இருந்த சிறப்பு என அனைத்தையும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பேராசிரியர், சொற்பொழிவாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், கடித இலக்கியம் படைத்தவர், எழுத்து சீர்திருத்தம் கடைபிடித்தவர், பயணக்கட்டுரை, உலகத்தமிழ ஆராய்ச்சிக் கழகம், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தொடங்கியவர் சாலையாரின் பல்வேறு பரிமாணங்களையும் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

பல்துறை வித்தகராகத் திகழ்ந்த பகுத்தறிவாளர் பெரியாரின்பெருந்தொண்டர் , கொள்கை போர் முரசு, பகுத்தறிவுப் பாவலர் சாலையார் புகழ் பரப்பும் நூல், பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author