திருமாலின் 10 வகை சயனத் திருக்கோலங்களில் ஒன்று தான் தல சயனத் திருக்கோலம். இந்த அருள் கோலத்தில், பெருமாள் காட்சி அளிக்கும், திருக்கோயில் தான் மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோயிலாகும். 108 திவ்விய தேசங்களில் 63-வது புண்ணிய ஷேத்திரமாக விளங்கும் இத்திருக்கோயிலைப் பற்றி இப்போது பார்ப்போம் .
தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது தல சயனப் பெருமாள் திருக்கோயில்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசன் என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலை நிர்மாணித்து வழிபட்டு வந்ததாக கோயில் தல வரலாறு சொல்கிறது.
முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடத்தில் வைத்து சிறப்பிக்கப்படும் பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமான இக்கோயிலில் 12 ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன.
திருமாலின் கையிலுள்ள கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார்,108 திவ்விய தேசங்களில் 13 திவ்விய தேசங்களுக்கு மட்டும் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புன்னை மரமே தலமரமாகவும், புண்டரீக புஷ்கரணி தீர்த்தமாகவும் விளங்கும் இக்கோயிலில், சயனப் பெருமாள் கிடந்த கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் காட்சி அளிக்கிறார். மேலும் தனது நான்கு திருக்கரங்களில் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்திருக்கிறார்.
உற்சவராக உலகுய்ய நின்றான் என்னும் திருநாமத்துடன் பெருமாள் விளங்குகிறார். அவருக்கு இருபுறமும், நில மங்கை தாயாரும்,ஆண்டாளும் காட்சி அளிக்கிறார்கள்.
கோயிலின் வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர், ராமர்,கருடன் ஆகிய சன்னதிகள் உள்ளன .
7ஆம் நூற்றாண்டில்,பல்லவ மன்னன் மல்லேஸ்வரன் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தை நிறுத்தியதால்,மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் ,கோபமுற்ற வைணவப் பெரியவர்கள், இட்ட சாபத்தால் மன்னன் அங்குள்ள குளத்தில் முதலையாக வாழ்ந்து வந்ததாகவும், புண்டரீக மகரிஷிக்கு 1000இதழ் கொண்ட தாமரை பூவைப் பறித்து கொடுத்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.
எனவே இக்கோயிலில்,புண்டரீக மகரிஷியின் திருப்பாதம் பட்ட புஷ்கரணி தெப்பக்குளத்தில் ,மாசி மகத்தன்று தல சயனப் பெருமாளுக்கு தெப்ப உற்சவம் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
இதனாலேயே, மகாளய அமாவாசை அன்று , இந்த கோயிலில் திதி கொடுத்தால், காசி ராமேஸ்வரம் ,கயா ஆகிய தலங்களில் திதி கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி விழா ,சித்திரை திருவிழா உள்ளிட்ட பெருமாளுக்கு உரிய திருவிழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலுக்கு வந்து தல சயனப் பெருமாளையும்,நிலமங்கை தாயாரையும் வழிபட்டால் நிலம்.சொத்து,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் என்றும், வீடு மனை வாகன யோகம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
சுவாதி நக்ஷத்திர நாளில் ,இந்த கோயிலுக்கு வந்து வணங்கினால்,கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.