எது கவிதை.

Estimated read time 1 min read

எது கவிதை !
நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! cveerapandiathennavan@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : மதுரைத் தென்றல், 10ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-3. அலைபேசி : 98421 81462
*****
நூலாசிரியர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர், மதுரைத் தென்றல் என்ற இதழின் ஆசிரியர், மதுரையில் தொடர்ந்து கவியரங்கம் நடத்தி வருபவர். திரைப்படப் பாடல் ஆசிரியர். நெல்லை ஜெயந்தா அவர்கள், இவர் தலைமையில் மதுரையில் கவிதை பாடி இருக்கிறார். மாணவ, மாணவியரையும் கவிதை எழுத வைத்து, பரிசு கேடயங்கள் வழங்கி தமிழ் வளர்த்து வரும் மாமனிதர்.மாமதுரைக்கவிஞர் பேரவையின் செயலராக இருந்த நானும் .இவர் தலைமையில் கவியரங்கில் கவிதை பாடி வருகிறேன் .எனது கவிதை ஆற்றல் வெளிப்படுத்த அற்புதமான தலைப்புகள் தந்து வருபவர் .தமிழ் மொழி மீது அளப்பரிய பற்று மிக்கவர். என் போன்ற பல வளரும் கவிஞர்களுக்கு மேடை தந்து வளர்த்து விட்டவர் .
எது கவிதை என்று யாராலும் வரையறுத்துக் கூற முடியாது என்ற கருத்தோடு இருந்தேன். எது கவிதை என்ற கவிதை நூல் படித்தவுடன், எது கவிதை என்பதை புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது.
எது கவிதையன்று, எது கவிதை என இரண்டையும் கவிதையாக வடித்து இருப்பது சிறப்பு. இலக்கியத்தில் எல்லா வகைகளையும் விட கவிதைக்கு தனி இடம் என்றும் உண்டு.
கவிதை ரசித்து, ருசித்து படித்தால் நாமும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை பிறக்கும், கவிதையும் பிறக்கும்.
காற்றடிக்கும் திசை மாறும் / காகிதமா? கவிதை!
சேற்றினையே சந்தனமாய்ச் / செப்புவதா? கவிதை!
ஆற்றவரும் அடுக்குமொழி / அணிவகுப்பா? கவிதை!
வேற்றுமொழி எழுத்துக்களை / விதைப்பதல்ல கவிதையே!
கவிதை எழுதும் சிலர் வேற்றுமொழி எழுத்துக்களை மட்டுமல்ல வேற்றுமொழி சொற்களையே குறிப்பாக ஆங்கிலச் சொற்களையே கலந்து கவிதை எழுதி வருகின்றனர். திரைப்படப் பாடலாகவும் வருகின்றது. அவை கவிதையன்று. விளக்கி உள்ளார். இனியாவது கலப்பின்றி கவிதை எழுதுவோம். அன்னைத் தமிழுக்கு உரம் சேர்ப்போம். `
பிரம்பெடுக்கத் தெரியாத / புறப்பாடா? கவிதை!
முரசொலிக்கத் தெரியாத / முரண்பாடா? கவிதை!
பரம்படிக்கத் தெரியாத / பெரும்பாடா? கவிதை!
வரம்பின்றிப் பிறசொல்லை / விதைப்பதல்ல கவிதையே!
முடிந்தவரை தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை வடிப்பது நன்று என்பதை நூல் முழுவதும் கவிதையால் நன்கு உணர்த்தி உள்ளார்.
குட்டைகளைக் குழப்புகின்ற / கொடிபிடிப்பா? கவிதை!
பட்டறிவைத் தெரியாத / படுகுழியா? கவிதை!
கெட்டவையைக் களையாத / கிறுக்கலா? கவிதை!
அட்டைகளாம் பிறஎழுத்தின் / அடுக்கல்ல கவிதையே!
வடமொழி எழுத்துக்களை வலிய பயன்படுத்துவதை தவிர்த்திட வழி சொல்லும் நல்ல கவிதை நூல் இது.
எது கவிதை என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள், மடை, உடை வெள்ளமென கவிதைக் கொட்டும் குற்றால அருவியென கவிதை கொட்டும் குற்றாலக் கவிராயர். கவியரங்கில் வடித்த கவிதைகளை நூலாக்கி தந்துள்ளார்கள். இந்த நூலை 13-07-2014 அன்று நடந்த கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழாவிற்கு கவிதை எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். அவர்களுக்கும் கவிதை பற்றி புரிதலை உண்டாக்கும் என்பது உறுதி.
எது கவிதை என்பதற்கு விளக்கம், கவிதையிலேயே அவரே தருகின்றார். படியுங்கள்.
நேர்கோட்டில் நடந்துவரும் / நெற்றிக்கண் கவிதை!
போர்ப்பரணி எழுத வரும் / புயல்வேகம் கவிதை!
மார்தட்டும் மனிதநேய / மணிமுடிகள் கவிதை!
வேர்விட்டு நிலைக்கவரும் / வாலறிவு கவிதையே!
மரபுக்கவிதை மன்னவர் நூலாசிரியர் சி. வீரபாண்டியத் தென்னவர் சொல் விளையாட்டு விளையாடி கவிதை வடித்துள்ளார்.
கவிதைக்கான விளக்கம் கவிதையிலேயே எழுதி நூலாக்கி உள்ளார்.
போலிகளை இனங்காட்டும் / புனித மனம் கவிதை!
காலிகளை வெளியேற்றும் / களப்பணியும் கவிதை!
வேலிகளாய்ப் பயிர்காக்கும் / விழுதுகளும் கவிதை!
தாலிக்கு நூலாகும் / தகுதியாக்கும் கவிதையே!
நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகி வருகின்றன. படித்த முட்டாள்களும் பெருகி வருகின்றனர். பகுத்தறிவைப் பயன்படுத்திடப் பயப்படுகின்றனர். அவர்களுக்கு தெளிவு ஏற்பட பயம் போக்கிட கவிதை வடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளார்.
மடமைகளைக் கொளுத்த வரும் / மறுமலர்ச்சி கவிதை!
கடமைகளை உரைக்க வரும் / கருத்தோட்டம் கவிதை!
தடம் பதிக்க மலர்ந்து வரும் / தமிழோசை கவிதை!
சுடர்விரிக்கச் சிறந்து வரும் / செறிவாக்கம் கவிதையே!
நூல் முழுவதும் இரண்டு பகுதியாக முதலில் எது கவிதையன்று என்றும், அடுத்து எது கவிதை என்றும் கவிதைகள் வடித்து கவி விருந்து வைத்து கவிதை பற்றி நன்கு உணர்த்தி உள்ளார்.
கனிகளான கருத்துகளின் / களஞ்சியமே கவிதை!
மனிதநேய வெளிப்பாட்டின் / மணிமுடியே கவிதை!
இனிய தமிழ் மொழி காக்கும் / எழுச்சி வெள்ளம் கவிதை!
புதிய நோக்கப் பொலிவுகளின் / புது விழிப்பும் கவிதை!
நூலாசிரியர் ஆன்மீகவாதி என்பதால் கடவுள் அந்தாதி எழுதி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 40 தொட்டு விட்டன. பாராட்டுக்கள். தமிழன்னைக்கு கவிதை நூல்களால் அணி செய்துவரும் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொய்வின்றி தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

Please follow and like us:

You May Also Like

More From Author