இலங்கை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய புயலின் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. உதாரணாமாக, இலங்கைத் தீவு முழுவதும் கடந்த 11 நாட்களாக பயங்கர கனமழை பெய்து வருகிறது. இதுவரை வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மட்டும் நிலச்சரிவால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மழையின் தாக்கம் தீவின் 25 மாவட்டங்களில் 17 மாவட்டங்களை முழுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, காலி, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மூழ்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரமான ஒரு சம்பவத்தில் கும்புக்கனா பகுதியில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உயர்ந்து வந்த வெள்ள நீரில் பேருந்து மூழ்கத் தொடங்கியபோது, அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் சென்று 23 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். இதுபோன்ற பல இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் வானிலை ஆய்வு மையம் தீவு முழுவதும் “ரெட் அலர்ட்” (மிக ஆபத்தான நிலை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை தொடரும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு அரசு இடமாற்றம் செய்து வருகிறது.இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கே நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறையினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் மோசமான வானிலை நெருக்கடிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
