நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அமெரிக்கா மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பாகப் பேட்டி அளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தப் போரைத் தாங்கள் தொடங்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் இதனைத் திட்டமிட்டபடி முடித்து வைப்பார் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஈரான் அண்டை நாடுகளின் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் அந்த நாட்டின் உண்மை முகம் உலகிற்குத் தெரியவந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அந்த நாடு ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி தொழிற்சாலைகளை உருவாக்குவதைத் தவிர மக்களுக்கு வேறு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று சாடியுள்ளார்.
தங்கள் நாட்டைப் பாதுகாவலர்களாக மட்டும் கருத வேண்டாம் என்றும் தாங்கள் அதிரடியாகச் செயல்படும் போர்வீரர்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்களைத் தகர்ப்பதே தங்களின் இலக்கு என்றும் அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்தவர்களுக்கு உரியப் பாடம் புகட்டப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வளைகுடாப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலில் அமெரிக்கா தனது ராணுவ வலிமையைத் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் எப்போது போரை நிறுத்த வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதுடன் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
