மனிதகுலத்தின் நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்:ஷி ச்சின்பிங்
நாகரிகங்களிடையே பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் பற்றிய 3ஆவது பேச்சுவார்த்தை மற்றும் முதலாவது உலக சீனவியல் அறிஞர்கள் மாநாடு ஜுலை 3ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் இதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
மனிதகுலத்தின் நீண்டகால வளர்ச்சிப் போக்கில், உலகிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள் சொந்த தனித்துவம் மற்றும் அடையாளம் வாய்ந்த நாகரிகங்களை படைத்துள்ளன. வேறுபட்ட நாகரிகங்களிடையே சமமான பரிமாற்றம், பரஸ்பர கற்றல் ஆகியவை, காலத்துக்குரிய இன்னல்களைச் சமாளிப்பதற்கும், கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கும் வழிகாட்டலை வழங்கும் என்று ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, அமைதி, வளர்ச்சி, சமத்துவம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மனிதகுலத்தின் பொது விழுமியங்களைப் பரவல் செய்து, உலகளாவிய நாகரிக முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தி, மனிதகுலத்தின் நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது. பல்வேறு நாடுகளின் சீனவியல் அறிஞர்கள், சீனா மற்றும் வெளிநாடுகளிடையே பண்பாட்டுத் தொடர்பு, புரிந்துணர்வு மற்றும் நட்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.