விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.

சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம்.

விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்;

விநாயகர் சதுர்த்தியை  முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி  தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் கஜமுகன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த நாளாக  விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதாக விநாயகர் புராணம் கூறுகிறது .

நெய்வேத்தியங்கள் கூறும்  வாழ்க்கை தத்துவங்கள்;

விநாயகர் சதுர்த்தி அன்று படைக்கப்படும் நெய்வேத்தியங்கள் சில வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துவதாக கூறப்படுகிறது. மோதகம் படைக்க காரணம் மோதும் அகங்கள் இல்லாமை அதாவது குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையை நிலை நாட்டுவதற்காகவும் , விளாம்பழம் -விளாம்பழத்தின் கடினமான ஓட்டுக்குள்  இனிப்பான கனி இருப்பது போல் கடினமான உழைப்பால் தான் இனிப்பான வாழ்க்கை கிடைக்கும் என்பதை விளாம்பழம் உணர்த்துவதாக கூறப்படுகிறது.

அவல்பொரி குசேலனை குபேரனாக்கிய  பொருளாகும். அவல்பொரி படைப்பதன்  மூலம் மன மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கொய்யா பழத்தின் கடினமான கொட்டை பகுதிகளும் இருக்கும், இனிப்பான சதை பகுதிகளிலும் இருக்கும், இதுபோல் தான் வாழ்க்கையில்  இன்பமும் துன்பமும் நிறைந்திருக்கும். இதை உணர்ந்து இரண்டையும் ஒரே சமநிலையில் பார்த்தோமேயானால் இறைவனை எளிதில் அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

கொழுக்கட்டை படைப்பதற்கு என ஒரு புராணக் கதையை கூறப்படுகிறது. முன்பொரு காலத்தில் ஞானபாலி என்ற அரசன் நல்ல முறையில் நாட்டை ஆட்சி செய்து வந்தார். இவர் தீவிர கணபதியின் பக்தனாவார் . ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது, அப்போது ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் செய்ய தொடங்கினார் ஞானபாலி  .அப்போது அந்த வழியில் சென்ற மேனகையின் மீது ஞானபாலியின் கண்கள் சென்றது. அவள் மீது உள்ள ஆசையால் யாகத்தை பாதியிலேயே நிறுத்தி அவள் பின்னே சென்றான்.

ஆனால் மேனகையோ மறைந்துவிட்டார். மீண்டும் யாகத்தை தொடர வந்த ஞான பாலியை ராஜகுரு எச்சரித்தார். அதையும் மீறி ஞானப்பாலி விட்ட  யாகத்தை மீண்டும்  தொடர்ந்தார் .அப்போது அஷ்டதிக் பாலகர்கள் தோன்றி ஞான பாலியை சபித்தனர். இதனால் ஒற்றைக்கண் பூதமாக மாறி கண்ணில் பட்ட மனிதர்களை உண்டு அரக்கனாக மாறினான்.

தன் பக்தன் ஞானபாலியை காப்பதற்காகவும் பூலோகத்தின்  நன்மைக்காகவும் கணபதி அங்கு வந்தார். தன்னை ரட்சித்து ஏற்றுக் கொள்ளுமாறு ஞானபாலி  வேண்டினான்,  உடனே கணபதி  விஸ்வரூப வடிவம் எடுத்து ஞானபாலியை தன் கையால் கொழுக்கட்டையாக பிடித்து விழுங்கி விட்டார். அன்றிலிருந்து விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டை ஞானப்பாலியை போய் சேருகிறது என்று புராணக் கதைகள் கூறுகிறது ஞானபாலியின் நினைவாக தான் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தை பொதித்து  இந்த உடலை இறைவனுக்கே அர்ப்பணிக்கிறோம் என்பதையே கொழுக்கட்டையின் தத்துவமாகும். மேலும் ஒவ்வொரு சதுர்த்தியிலும் எட்டு கொழுக்கட்டைகள் தானம் செய்து வந்தால் வறுமை ஒழியும் என்றும் நம்பப்படுகிறது.

ஆண்டு தோறும்  விநாயகருக்கு  விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் காரிய சித்தி மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும் என்றும்  கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author