சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை வரை மழை பெய்தது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பிறகு விட்டு விட்டு இடி மின்னலுடன் மழை பெய்ததால், அதிகாலை வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்பொழுது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவருகிறது.
மழையும் – வெயிலும் :
இதனிடையே, தென் தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
3 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை நிலவரம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2º- 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.