சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பிற்பகல் 1 மணியளவில் வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில், மக்கள் கடற்கரை பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் தங்கள் வாகனங்களில் வீடு திரும்ப முற்பட்ட பொதுமக்களால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக எம்.ஆர்.சி நகர், சாந்தோம் சாலை முழுவதும் சுமார் 3 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தபோதும், போக்குவரத்தில் முறையான கவனம் செலுத்தாதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி ,முறையான திட்டமிடலை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.