தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி.

தமிழ் சிதைந்தால்

தமிழினமே சிதைந்து போகும்!

கவிஞர் இரா. இரவி

இனத்தை அழிக்க மொழியை அழிப்பார்கள்
இனத்தைக் காக்க மொழியைக் காத்திடுங்கள்!

தினந்தோறும் தமிழ்க்கொலை நடக்குது ஊடகத்தில்
தமிழர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றோம்!

பேசுகின்ற பேச்சில் தமிழ் இல்லை
பேசுவது தமிங்கிலம் எங்கும் தமிங்கிலம்!

கடவுளின் கருவறையில் தமிழ் ஒலிக்கவில்லை
காணுகின்ற பலகைகளில் தமிழ் எழுதவில்லை!

உயர்நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கவில்லை
ஓங்கி ஒலிக்க வேண்டும் தமிழ் உயர்நீதிமன்றத்தில்!

அத்தைக்கு மீசை வைத்தால் மாமா அன்று
ஆங்கிலத்தைக் கொண்டாடினால் முதல்மொழி அன்று!

வேண்டவே வேண்டாம் வடமொழி எழுத்துக்கள்
வளமிக்க தமிழுக்கு பிறமொழி எழுத்துக்கள் தேவையில்லை !

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி !

ஆரம்பக்கல்வி தமிழிலேயே இருக்க வேண்டும்
அப்போது தான் குழந்தைக்கு அறிவு வளரும்!

தாய்மொழியின் முக்கியத்துவத்தை அன்றே நமது
தேசத்தந்தை காந்தியடிகள் வலியுறுத்திச் சென்றார்!

நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூரும்
நன்று தாய்மொழிக்கல்வி என்றே உரைத்தார்!

அறிவியல் மேதை அப்துல்கலாம் அவர்கள்
ஆரம்பக்கல்வியை தமிழிலேயே பயின்றார்!

கரும்பு தின்னக் கூலி தர வேண்டுமா?
கன்னித் தமிழைப் படிக்க அறிவுறுத்த வேண்டுமா?

குழந்தைகளின் பெயர்களில் தமிழ் இல்லை
குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டிட வேண்டுகிறோம்!

தமிழா தமிழ் உன் மொழியல்ல அடையாளம்
தமிழைக் காத்தால் தமிழினம் காக்கப்படும்!

Please follow and like us:

You May Also Like

More From Author