தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருது பாண்டியர்களின் உயிர்த்தியாக தினத்தையொட்டி அவர்களின் திருவுறுவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், வீரமிக்க தேசிய சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு அவர்களின் தியாகத் திருநாளில் தேசம் மிகுந்த நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது.
சிறந்த தொலைநோக்கு தலைவர்களாகவும் அசாதாரண நிர்வாகிகளாகவும் விளங்கிய அவர்கள், ஜம்புத்தீவு பிரகடனம் என்ற இந்திய சுதந்திரத்துக்கான முதல் பிரகடனம் மூலம் ஒடுக்குமுறை அந்நிய ஆட்சியில் இருந்து தேசத்தை ஒன்றிணைத்து விடுவிக்க ஒவ்வோர் இந்தியரையும் அழைத்தனர்.
கடைசி மூச்சு வரை காலனித்துவ ஆதிக்க ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார்கள். அவர்களின் துணிச்சலும் தியாகமும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிர்கால கிளர்ச்சிகளைத் தூண்டியதுடன் இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் பங்கேற்க பல தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.
தேசத்துக்கான அவர்களின் உச்சபட்ச அர்ப்பணிப்பின் காலத்தால் அழியாத மரபு, 2047 -ஆம் ஆண்டுக்குள் #வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.