முதுமை சுமையல்ல சுகம்

Estimated read time 1 min read

Web team

IMG-20241026-WA0013.jpg

முதுமை சுமையல்ல, சுகம்!

கவிஞர் இரா. இரவி !

******
‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்றனர். ‘நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்’ என்றார் விவேகானந்தர். முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள், ‘இயங்கிக் கொண்டே இருங்கள்’ என்றும், ‘விதைத்துக் கொண்டே செல்லுங்கள், அறுவடை தானாக வரும்’ ஒய்வு என்பது படுத்துத் தூங்குவது அல்ல .வழக்கான பணியிலிருந்து விடுபட்டு பிடித்தமான செயலில் இறங்குதல் .மூளைக்கு புத்துணர்ச்சிப் பிறக்கும் .சுறுசுறுப்பு வரும் . என்றும் சொல்வார்.

குரங்குக் கதை போல, நீர் ஊற்றி விட்டு தினமும் விதையை எடுத்து எடுத்துப் பார்க்கும் மனநிலையில் உடனை பயனை, விளைவை எதிர்பார்க்கக் கூடாது.

முதியவர்கள், தமக்கு வயது ஆகிவிட்டது என்று எண்ணுவதையே விட்டுவிட வேண்டும். என்றும் எனக்கு 30 வயது தான் என்று எண்ண வேண்டும். உடலுக்குத்தான் வயது, உள்ளத்திற்கு வயதில்லை, முதியவர்கள் என்றும் எனக்கு வயது 30 தான் என்பதை நன்கு பதிய மனதில் கொள்ள வேண்டும்.

எனக்கு வயது 54 ஆகின்றது, ஆனால், என் மனைவியிடம் கடந்த சில வருடங்களாக என் வயது 30 என்றே கூறி வருகிறேன். அதற்கு என் மனைவி உங்கள் மகன் வயது 25 ஆகிறது. உங்களுக்கு எப்படி 30 வயது ஆகும் என்று கேலி பேசுவார்.

சும்மா இருந்தால் இரும்பு கூட துரு பிடித்து விடும். முதியவர்கள் சும்மா வீட்டிலேயே இருக்காமல் தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு செயலில் இறங்க வேண்டும். புத்தகம் படித்தல், நூலகம் செல்லல், இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லுதல் என்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தினமும் காலையும், மாலையும் நடைப்பயிற்சி செல்லல் வேண்டும். பூங்காவிற்குச் சென்று இயற்கையை ரசிக்க வேண்டும், மனதை இளமையாகவே சுறுசுறுப்பாகவே எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ராக்பெல்லர் என்ற பணக்காரர் விமானத்தில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த இளைஞன் கேட்டான். உங்களுக்கு வயதாகி விட்டதே, வீட்டிலேயே ஓய்வு எடுக்கலாமே? என்றான். அதற்கு ராக்பெல்லர் சொன்னார், விமானம் மேலே பறந்து கொண்டு இருக்கின்றது, இப்போது எஞ்சினை நிறுத்தி விடலாமா? என்றார். அய்யோ விபத்தாகி விடுமே என்றான். அதுபோல தான் மனிதன் மூச்சு உள்ளவரை, முடியும் வரை உழைக்க வேண்டும் என்றார்.

அரசு ஊழியர் பலர் ஓய்வு பெற்றவுடன் தனது வாழ்க்கையை முடிந்து விட்டது போல எண்ணுகின்றனர். வயதான காலத்தில் சாதித்த பலரை எண்ணிப்பார்க்க வேண்டும்.

“வீடு போ, போ என்கிறது, காடு வா, வா என்கிறது, என்னை, ஆண்டவன் அழைக்க மாட்டேன் என்கிறான். சாவு வந்தால் நிம்மதியாக செத்து விடுவேன்”, இதுபோன்ற புலம்பல்களை முதியோர்கள் தவிர்க்க வேண்டும். இறுதிமூச்சு உள்ளவரை இனிமையாக வாழ்ந்திட வேண்டும்.

‘மகிழ்ச்சி என்கிற உணர்ச்சி இல்லாவிடில் வாழ்க்கை சுமையாகி விடும்’ என்கிறார் பெர்னாட்சா.

சென்னை மருத்துவர் V.S. நடராஜன் அவர்கள், புற்றுநோய் வந்த நோயாளியிடம் சொல்லாமல் உடன்வந்த உறவினர்களிடம் மட்டும் சொல்லி அவருக்குத் தெரிய வேண்டாம் என்று சொல்லி மருந்துகள் கொடுத்து அனுப்புகின்றார். சில நாட்களில் அவருக்கு புற்றுநோய் குணமாகி மிக நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அவரிடம் சொல்லி இருந்தால் அவர் மனதால் உடைந்து இருப்பார்.

புற்றுநோய் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை நவீன மருத்துவங்கள் வந்துவிட்டன. சரியாகி விடும், குணமாகி விடும் என்ற மனநிலை வேண்டும், எதற்கும் கவலைப்பட தேவை இல்லை. கவலையால் நோய் தான் வரும், மகிழ்ச்சி காணாமல் போகும்.
வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு வாழ வேண்டும். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும், எதையும் நேர்மறையாக உடன்பாட்டுச் சிந்தனையுடன் சிந்திக்க வேண்டும், முடியாது, நடக்காது, இயலாது என்பதை விட்டுவிட்டு, முடியும், நடக்கும், இயலும் என்றே செயல்பட வேண்டும்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் சொல்வார்கள் ,முதியவர்கள் திட்டமிட்டு வாழ வேண்டும் என்று . முதியவர்கள் தன்னிடம் உள்ள சொத்துக்கள் முழுவதையும் வாரிசுகளுக்கு வழங்கி விடாமல் ஒரு பகுதியை மட்டும் வழங்கி விட்டு ஒரு பகுதியை தங்கள் பெயரிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

தன் ஆயுளுக்குப் பிறகு தான் வாரிசுகளுக்கு சேரும் என்று உயில் எழுதி பதிவு செய்து வைத்து விட வேண்டும். முழு சொத்துக்களையும் வாரிசுகளுக்கே கொடுத்து விட்டு வாரிசுகளிடம் கெஞ்சி நிற்கும் அவலம் பல இடங்களில் நடந்து வருகின்றது.

எனவே இந்த விஷயத்தில் முதியவர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, வாழ வேண்டும். இறக்கும் வரை முதியவர்கள் பெயரில் சொத்து இருந்தால் தான் வாரிசுகள் மதிக்கும், கவனிக்கும்,
இளையோரும் முதியவர்களை கவனிக்கும் மனநிலைக்கு வர வேண்டும். முதியோர் இல்லங்கள் பெருகி வருவது நமக்கு அவமானம் தான். முதியோர் இல்லத்தில் தந்தையை விட்டு விட்டு வந்த மகனிடம் அவன் மகன் கேட்டான், அப்பா, உனக்கு வயதானதும், நானும் உன்னை இங்கு தான் கொண்டு வந்து விட வேண்டுமா? என்றான், அந்தக் கேள்வி, அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

பரிசு பெற்ற சிறுகதை ஒன்று படித்தேன். நண்பர் இளவர் அரிகரன் எழுதியது. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இருவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் எங்களுக்கு தாத்தா, பாட்டி இல்லையா? என்று அடிக்கடி கேட்கின்றனர். இருவரும் முடிவெடுத்து முதியோர் இல்லத்திலிருந்து இருவரை தத்து எடுத்து வந்து தாத்தா, பாட்டி என்று குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைக்கின்றனர். மிக நெகிழ்ச்சியான கதை, தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் மனமகிழ்ச்சியோடு வளரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய கிருஷ்ணசாகர் அணையைக் கட்டிய பொறியாளர் விஷ்வேசரய்யா பிறந்த செப்டெம்பர் 15 ஆம் நாளை ( 15.9.1861 ) அகில இந்திய பொறியாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். 101 ஆண்டுகள் வாழ்ந்த மாமனிதர். அவர் சொல்வதும், இயங்கிக் கொண்டே இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள, கவலை கொள்ளாதீர்கள் என்பது தான்.

இந்தியாவின் கடைக்கோடியில் படகோட்டி மகனாகப் பிறந்து, இந்தியாவின் முதற்குடிகனாக உயர்ந்தவர், செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களிடம் மகிழ்வான தருணம் எது? என்ற போது, குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நேரத்தைச் சொல்லவில்லை, எடை குறைவான காலணி கண்டுபிடித்துக் கொடுத்ததால், போலியோ நோயால் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எளிதாக நடந்து வந்த தருணம், மகிழ்ச்சியான தருணம் என்றார்.

குடியரசுத் தலைவர் பதவி முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் என்றதும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகப் பணிபுரிவேன் என்றார். இந்த மனநிலை தான் எல்லா முதியவர்களும் பெற வேண்டும்.

பணக்காரப் பெண்மணி வீட்டிற்கு ஒருவர் வந்து இருந்தார். வந்த அவரிடம் அந்தப் பெண்மணி எனக்கு நிறையப் பணம், நகை, பட்டுப்புடவை எல்லாம் உள்ளன, ஆனால் நிம்மதி இல்லவே இல்லை. மனஅழுத்தம் உள்ளது, நோய்களும் உள்ளன. நிம்மதிக்கு வழி சொல்லுங்கள் என்றார்.

அருகே வீட்டை சுத்தம் செய்த வேலைக்காரிப் பெண்ணை அழைத்துக் கேட்டர், உன் வாழ்க்கை நிம்மதியாக உள்ளதா? என்றார். வேலைக்காரி சொன்னாள், விபத்தில் என் கணவர் இறந்து விட்டார், டெங்கு காய்ச்சலில் என் மகனும் இறந்து விட்டான். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்தேன்.

மழையில் நனைந்தபடி பூனை ஒன்று வீட்டு வாசலுக்கு வந்தது, பால் ஊற்றினேன். பாசத்துடன் என்னுடனேயே இருந்து விட்டது, வளர்த்து வருகிறேன். வீட்டு அருகே உள்ள முதியவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கி வருகிறேன். என்னை வாழ்த்தினார்கள், பிறருக்கு உதவுவதில் வந்த மகிழ்ச்சியின் காரணமாக என் வாழ்க்கை இனிமையாக உள்ளது என்றார். பணக்காரப் பெண்ணிற்கு புத்தி வந்தது, நிம்மதியும் வந்தது.

முதியவர்கள் சாவு வந்து விடும் என்று கவலை கொள்ளத் தேவை இல்லை, சாவு வரும் போது வரட்டும், இருக்கும் வரை, கடைசி நிமிடம் வரை, கடைசி மூச்சு இருக்கும் வரை வாழ்க்கையை ரசித்து வாருங்கள். வயதாகி விட்டது என்ற எண்ணத்தையும், கவலையையும் விட்டு விட்டு, முன்பு முதுமையில் சாதித்த முதியோர்களைப் பாடமாகக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தால், முதுமை என்பது சுமை அல்ல, சுகமே

Please follow and like us:

You May Also Like

More From Author